இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடியில் ராணுவ ஒப்பந்தம்

மாலே: இந்தியா - மாலத்தீவு இடையே ரூ.362 கோடியில் ராணுவ கடன் வரம்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளாக நேற்று முன்தினம் மாலத்தீவு சென்ற அவர், இந்தியா சார்பில் கூடுதலாக ஒரு லட்சம் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை வழங்கினார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியா தீதி உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து நேற்று மாலத்தீவு அதிபர் இப்ராகீம் முகமது சோலியை சந்தித்து பேசினார். அப்போது, ராணுவ திட்டங்களுக்கான ரூ.362 கோடி மதிப்பு கடன் வரம்பு ஒப்பந்தமானது அந்நாட்டின் நிதித்துறை மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இடையே கையெழுத்தானது. இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில், ”இந்தியா எப்போதும் மாலத்தீவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும். இந்த ஒப்பந்தம் மாலத்தீவு கடலோர காவல்படை திறனை வலுப்படுத்தும் மனிதாபிமான மற்றும் பேரழிவு நிவாரண முயற்சிகளுக்கு உதவும். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

* இந்தியாவுக்கு ஐநா பாராட்டு

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டிஎஸ் திருமூர்த்திக்கு ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டாரஸ் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 17ம் தேதியிட்ட இந்த கடிதத்தில் பொது செயலாளர் ஆன்டனியோ கூறியிருப்பது குறித்து திருமூர்த்தி தனது டிவிட்டரில், ”ஐநாவின் அமைதி பாதுகாவலர்களுக்காக 2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியாவிற்கு பாராட்டுக்கள். தொற்று நோய்க்கு எதிராக செயல்படும் முயற்சிகளில் இந்தியா உலகளாவிய தலைவராக இருந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முக்கியமான மருந்துகள், பரிசோதனை கிட்டுகள், வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது. கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது” என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>