போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்ற வங்கதேச வாலிபர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு துபாய்க்கு தனியார் விமானம் புறப்பட தயாரானது. அதில் செல்ல இருந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருப்பூர் மாவட்ட முகவரி கொண்ட பாஸ்போர்ட்டில் சோலைமான் (29) என்பவர் துபாய் செல்ல வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, அது போலி என தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரின் பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.  

விசாரணையில் அவர், வங்கதேச நாட்டை சேர்ந்த மியாக் அவா (27) எனவும், போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றதும் தெரியவந்தது. கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அவரை தனியறையில் வைத்து, அவர் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு எப்படி வந்தார், திருப்பூரில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்தார், இவருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த ஏஜென்ட் யார், இவருக்கு தீவிரவாத கும்பலோடு தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>