களியக்காவிளை : அருமனை போலீஸ் எல்லைக்குட்பட்ட அம்பலக்காலை அருகே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அருமனை அருகே அம்பலக்காலை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக பிளாஸ்டிக் தொழிற்சாலை அமைக்க அப்பகுதியை சேர்ந்த ஒருவர் முயற்சி மேற்கொண்டார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். விளைநிலங்கள், காற்று, நீர் மாசடையும் எனவும் பிளாஸ்டிக் புகையினால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆலை முன் கருப்பு கொடி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாரும் அளித்திருந்தனர். கிராமமக்கள் தரப்பில் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அந்த தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை ரகசியமாக நடத்தி வந்ததாக தெரிகிறது. நேற்று காலை மின்வாரியத்துறை ஊழியர்கள் அந்த ஆலை பகுதியில் வந்துள்ளனர். தொடர்ந்து ஆலைக்காக தனி டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகளை துவக்கினர். முதற்கட்டமாக தூண் அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளனர். இதை கவனித்த இப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களிடம் விசாரித்த போது, பிளாஸ்டிக் ஆலைக்காக தனி டிரான்ஸ்பார்மர் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், அதை நிறுவுவதற்காக வந்துள்ளதாகவும் மின்வாரிய ஊழியர்கள் பதிலளித்தனர். இது குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் ஏராளமானவர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால் கிராம மக்களுக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அருமனை போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிராமமக்கள் தரப்பில், இங்கு ஆலை அமைக்கக்கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தற்போது நிலுவையில் இருப்பதால், அதன் தீர்ப்பு வரும்வரை எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என வாதிட்டனர். மின்வாரிய ஊழியர்கள் தரப்பில், புது டிரான்ஸ்பார்மர் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் அதை அமைக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். தற்போது பிரச்னை இருப்பதால் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை கைவிடுமாறு மின்வாரிய ஊழியர்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். கிராம மக்களிடம் பேசிய போலீசார் இதுதொடர்பான ஆவணங்களை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து தரும்படியும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். …
The post அருமனை அருகே பிளாஸ்டிக் ஆலைக்கு டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு-பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.