×

ஆஸி. ஓபன் டென்னிஸ் 9வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று அசத்தல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அந்த செட்டில் மெட்வதேவ் ஓரளவு ஈடுகொடுத்து விளையாடியதால், அடுத்தடுத்த செட்கள் கடும் போராட்டமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி மெட்வதேவை திணறடித்த ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி ஆஸி. ஓபனில் 9வது முறையாகவும், தொடர்ச்சியாக 3வது முறையாகவும் சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

அவரது வேகத்தை சமாளிக்க முடியாமல் எதிர்ப்பின்றி சரணடைந்த மெட்வதேவ் விரக்தியுடன் தனது டென்னிஸ் மட்டையை தரையில் அடித்தும், ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டும் தன்னைத் தானே நொந்து கொண்டார். 2019 யுஎஸ் ஓபன் பைனலில் நடாலிடம் தோற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை வீணடித்த அவர், தற்போது ஆஸி. ஓபன் பைனலில் ஜோகோவிச்சிடம் தோற்று 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். ன்னிஸ் அரங்கில் ரோஜர் பெடரர் (39 வயது, சுவிஸ்.), ரபேல் நடால் (34 வயது, ஸ்பெயின்), ஜோகோவிச் (33 வயது) மூவரும் கடந்த 15 ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செலுத்தி வரும் ஆதிக்கம் தொய்வின்றி தொடர்கிறது. இதை முறியடிக்கும் அளவுக்கு இளம் வீரர்கள் இன்னும் தயாராகவில்லை என்பதையே ஆஸி. ஓபன் முடிவு நிரூபித்துள்ளதாக டென்னிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர், நடால் இருவரும் தலா 20 பட்டங்களுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், ஜோகோவிச் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

Tags : Aussie ,Djokovic ,Open ,Grand Slam , Aussie. Djokovic wins Open tennis for ninth time: 18th Grand Slam title
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...