×

அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான இன்ஜின்: விமானியின் சாதுர்யத்தால் 200 பயணிகள் தப்பினர்

டென்வர்: அமெரிக்காவில் பயணிகள் விமானத்தில் திடீரென ஒரு இன்ஜினில் தீப்பிடித்தது. நடுவானில் தீயுடன் விமான பாகங்கள் உடைந்து விழுந்த நிலையில், விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரை இறங்கினார்.
அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து நேற்று மதியம் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு இன்ஜினில் தீப்பிடித்தது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. விமானம், டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டு, மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

வரும் வழியிலேயே விமானத்தின் இன்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் விழுந்தன. இதனால் கடும் பீதி ஏற்பட்டது. ஆனாலும், பதற்றப்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட், விமானத்தை டென்வர் விமான நிலையத்தில் தரையிறக்கினார். இன்ஜினில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமான இன்ஜினில் தீப்பிடித்தபோது எடுத்த வீடியோ மற்றும் உடைந்த பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


* நெதர்லாந்திலும் தீப்பிடித்த விமானம்
அமெரிக்காவைப் போலவே நெதர்லாந்திலும் நடுவானில் விமானம் தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள மாஸ்ட்ரிச் ஆச்சென் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் புறப்பட்ட சரக்கு விமானம் திடீரென நடுவானில் தீப்பற்றியது. உடனடியாக அவ்விமானம் பெல்ஜியம் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. ஆனாலும், விமானத்தின் இன்ஜினில் இருந்து இரும்பு பிளேட்கள் தீயுடன் குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கார்கள் சில சேமதடைந்தனர். மூதாட்டி ஒருவர் காயமடைந்தார்.

Tags : United States , Aircraft engine caught fire in US amidst turmoil: 200 passengers escape
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!