×

நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தா உறவினர்களுக்கு சிபிஐ நோட்டீஸ்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் வழக்கில், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் மனைவி மற்றும் மனைவியின் தங்கைக்கு சிபிஐ நோட்டீஸ் தந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் வருகிற ஏப்ரல்-மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ தீவிரம் காட்டி வருகின்றது. திரிணாமுல் தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ள ஊழல் வழக்கு விசாரணைகளை தூசு தட்ட தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலக்கரி ஊழல் வழக்கை சிபிஐ கையிலெடுத்துள்ளது.

முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் டைமண்ட் ஹார்பர் தொகுதி எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா மற்றும் அவரது தங்கை மேனகா கம்பீருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நடக்கும் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ள அந்த நோட்டீஸ் இருவரது வீட்டு கேட்டில் அதிகாரிகள் ஒட்டிச் சென்றனர். இதனால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்து பாஜ கூட்டாளிகளும் விலகி விட்டனர். இப்போது சிபிஐ மற்றும் அமலாக்க துறை தான் பாஜவின் கூட்டாளி. சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் பழிவாங்கும் நோக்கமாகும். இதனை பார்த்து திரிணாமுல் காங்கிரஸ் பயந்துவிடாது. பாஜவின் இத்தகைய செயல்பாடுகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலளிப்பார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

* எலிக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்
இது குறித்து மம்தா கூறுகையில், ‘‘எனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்தது கிடையாது. ஜெயிலை காட்டி எங்களை பயமுறுத்த முடியாது. நாங்கள் துப்பாக்கிக்கு எதிராக சண்டை போட்டவர்கள். எலிக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். 2021ல் நடக்கும் போட்டியில் நான் கோல்கீப்பராக உள்ளேன். இதில் யார் ஜெயிக்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்பதை பார்ப்போம்’’ என்றார்.

Tags : CBI ,West ,Bank , CBI issues notice to Mamata's relatives in coal scam case
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...