×

மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் கோயில் யானையை கொடூரமாக தாக்கிய பாகன்கள்: சமூக வலை தளங்களில் வைரலான வீடியோ

கோவை: இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இம்முகாமில், தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 26 யானைகள் பங்கேற்றுள்ளது. 48 நாள் நடக்கும் முகாம் வரும் மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த முகாமில் யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கவும், கோயில் யானைகளின் மன அழுத்தத்தை போக்கவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

முகாமில் பங்கேற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் சரமாரியாக குச்சியால் அதன் கால்களில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் யானை பாகன்கள் இருவர் மரத்தில் கட்டியுள்ள யானையின் இரண்டு கால்களிலும் அடிக்கின்றனர். வலி தாங்க முடியாத யானை சத்தம் போடுகிறது. அழுகிறது. இருப்பினும், அவர்கள் யானையை தொடர்ந்து அடித்து துன்புறுத்துகின்றனர். இந்த கொடூர தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.  

பாகன்கள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாகன்களின் இந்த செயலுக்கு வன ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்மந்தப்பட்ட நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர். இது குறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “யானையை அடித்து சித்ரவதை செய்யும் பாகன்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில் பாகன்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். யானைகளை இது போன்று அடிப்பது மிகவும் தவறான செயல். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

2 பாகன்கள் கைது: தேக்கம்பட்டி யானைகள் முகாமில், ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை கடுமையாக தாக்கியதாக பாகன் வினில் குமாரை என்ற ராஜன் (46) மற்றும் சிவபிரசாத் (32) ஆகியோரை மேட்டுப்பாளையம் வனத்துறை ரேஞ்சர் பழனி ராஜன் விசாரணைக்காக புத்துணர்வு முகாமில் இருந்து வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், யானையை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Bagans ,Temple Elephant ,Refreshment ,Camp , Pagans brutally attack temple elephant at Mettupalayam Refreshment Camp: Viral video on social media
× RELATED நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு மருத்துவ பரிசோதனை