நாகை: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தலைமையில் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 250 மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், 21 வயதை கடந்தவர்கள் நிறைய பேர் இங்கு இருக்கிறீர்கள். இங்கு கலெக்டர், நான் ஆகிய இரண்டு பேரும் பேசுவதற்கு முன்பு வணக்கம் என்று கூறினோம். ஆனால் பதிலுக்கு நீங்கள் எதுவும் கூறவில்லை.
சபை நாகரிகம் தெரியாதா? 21 வயதை கடந்தவர்கள் தானே நீங்கள்? சபை நாகரீகத்தை கற்று கொள்ளுங்கள் என்று டென்ஷனாக பேசினார். இதன் பின்னர் மாணவர்களுக்கு அமைச்சர் கையால் வழங்கிய டேட்டா கார்டுகளை மேடையின் கீழ் நின்ற பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், வாங்கி கொண்டனர். அவர்களிடம் கேட்டதற்கு, இன்னும் இந்த கார்டுகள் ஆக்டிவேட் செய்யப்படவில்லை. மாணவர்கள் தங்களது ஆதார் அட்டையை கொடுத்து டேட்டா கார்டுகளை ஆக்டிவேட் செய்த பின்னர் வழங்கப்படும் என கூறினர். இதனால் ஆர்வமுடன் டேட்டா கார்டுகள் வாங்க வந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.