பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமான கேரள இளம்பெண்ணை ஓட்டலில் சீரழித்த வாலிபர்: கோவை போலீசார் விசாரணை

கோவை: பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமான கேரள இளம்பெண்ணை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று சீரழித்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் கொட்டாரக்கராவை சேர்ந்த 25 வயது இளம்பெண் அங்குள்ள ஐசிஐசிஐ இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். பப்ஜி விளையாடும் இவருக்கு இதன் மூலம் கேரளாவை சேர்ந்த 25 வயது வாலிபருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பப்ஜி விளையாடுவதோடு செல்போன் மூலம் அடிக்கடி பேசி சகஜமாக பழகி வந்தனர். நீண்ட நாட்களாக செல்போனிலேயே பேசி வந்த அவர்கள் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க ஆசைப்பட்டனர்.

இதனையடுத்து அந்த வாலிபர் நாம் இருவரும் கோவையில் சந்திப்போம் என அந்த இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் தனித்தனியாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். பகலில் கோவையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். இரவு நேரமாகி விட்டதால் ஓட்டலில் அறை எடுத்து தங்கி விட்டு மறுநாள் செல்ல முடிவு செய்தனர். கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அறை எடுத்தனர். அங்கு அந்த வாலிபர் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் மறுநாள் அவர்கள் தனித்தனியாக தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து இளம்பெண் கேரள மாநிலம் பல்லூர்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், இளம்பெண்ணிடம் அத்துமீறியது கேரள மாநிலம் இடா கொச்சியை சேர்ந்த ஹரீஷ்(25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதி கோவை என்பதால் இந்த வழக்கு தற்போது கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமாகிய இளம்பெண்ணை வாலிபர் சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>