பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் மரங்களை வெட்டி சாய்க்கும் கேரள வனத்துறை: தமிழக அரசு கவனிக்குமா?

கூடலூர்: பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் இருக்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கவும், பேபி அணையை பலப்படுத்திய பின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும் கடந்த 2014ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 2014 நவம்பரில் அணையில் 142 அடி தண்ணீர் உயர்த்திய கண்காணிப்பு குழுவினர், அடுத்த படியாக அணையில 152 அடி தண்ணீர் தேக்கும் விதமாக பேபி அணையை பலப்படுத்த தீர்மானம் நிறைவேற்றினர்.

அணைப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதால் கேரள வனத்துறை கடந்த ஏழு ஆண்டுகளாக இதற்கு அனுமதி தராமல் காலம்தாழ்த்தி வருகிறது. ஆனால், கடந்த இருவாரங்களாக புலிகள் சரணாலய பகுதியில் பெரியாறு அணைக்குச் செல்லும் (டீர் ஐலேண்ட்) மான் தீவு என்னுமிடத்தில் கேரள வனத்துறையினர் டென்ட் அமைத்து கூலி ஆட்களை வைத்து நூற்றுக்கணக்கான மரங்களின் பட்டையை உரித்தும், வெட்டியும் வருகின்றனர். வனப்பகுதியில் மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், வனப்பகுதியில் யானைக்கு உணவான புல் வளர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மரங்கள் அதிக அளவில் உள்ளதால் யானையின் வழித்தடமும் மாறுகிறது. அதனால் மரங்களின் பட்டைகள் உரிக்கப்படுகிறது, ஒருசில இடங்களில் மரங்கள் வெட்டப்படுகிறது என கேரள வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் பட்டை உரிக்கப்படும் மரங்கள் நாளடைவில் காய்ந்து ஒடிந்து விழும். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இன்றி புலிகள் சரணாலயப்பகுதியில் மரங்கள் வெட்ட கேரள வனத்துறைக்கு எவ்வித அதிகாரம் உண்டோ, அதே அதிகாரத்தை பயன்படுத்தி பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள 23 மரங்களை வெட்டி, அணையை பலப்படுத்தி பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>