×

ரூ.6,941 கோடியில் காவிரி- வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம்..! புனரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

புதுக்கோட்டை: காவிரி- தெற்கு வெள்ளாறு-வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக்கால் வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாயை உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாயை வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. ரூ.14,400 கோடியில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள குன்னத்தூரில் நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வரவேற்றார். விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Tags : Kavi - Vaikai ,First Minister ,Palanisami , Rs 6,941 crore Cauvery-Vaigai-Gundaru river connection project ..! Chief Minister Palanisamy laid the foundation stone for the reconstruction work
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு