மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத் மட்டும் எப்படி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்? பேரறிவாளன் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளியான நடிகர் சஞ்சய் தத் மட்டும் எப்படி முன்கூட்டியே விடுதலை அளிக்கப்பட்டது?’ என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். ‘இவர்களை விடுதலை செய்யும் முழு அதிகாரம் மாநில கவர்னருக்கு உண்டு,’ என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், ‘எனக்கு எதிராக ஒரு ஆதாரத்தை கூட சிபிஐ.யால் இதுவரை கொடுக்கப்படவில்லை என்பதால் வழக்கின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்,’ என பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக ஆளுநருக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த மாதம் 25ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த முழு அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது. மாநில ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட அதிகாரம் கிடையாது. அதனால், ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானம், பேரறிவாளன் கருணை மனு ஆகியவை நிராகரிக்கப்படுகிறது. இது குறித்து வேண்டுமானால் அவர்கள் ஜனாதிபதியிடம் சென்று முறையிடலாம்,’ என குறிப்பிடப்பட்டது. இதையத்து, இந்த வழக்கு விசாரணையை கடந்த 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால், தற்போது வரையில் இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், மும்பை எரவாடா, அர்தர் சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஒரு விளக்கம் கேட்டு பேரறிவாளன் மனு கொடுத்தார். அதில், ‘மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 1993ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத். எப்படி முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? அதில், மாநில அரசின் அதிகாரம் மட்டும்தான் இருந்ததா அல்லது மத்திய அரசும் விடுதலைக்கு ஒப்புக் கொண்டதா? அதில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்த அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும்,’ என கோரப்பட்டது. ஆனால், இந்த மனுவுக்கு சிறை நிர்வாகம் பதிலளிக்க மறுத்து விட்டது.

இதனால், இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்து,நடிகர் சஞ்சய் தத் விவரங்களை கேட்டுள்ளார். அவர் சார்பாக வழக்கறிஞர் நிலேஷ் உக்கே ஆஜராகிறார். மனுவில் அவர், ‘சஞ்சய் தத் விடுதலை சம்பந்தப்பட்ட விவரங்களை வழங்கும்படி சிறை நி்ரவாகத்துக்கு உத்தரவிட வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள் கே.கே.தத்தாட், ஆர்.ஐ.சக்லா ஆகியோர், ‘‘இந்த மனுவுக்கு மகாராஷ்டிரா தகவல் உரிமை ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும், பேரறிவாளனை விடுவிக்கக் கோரி தமிழக அரசு வழங்கிய தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது தொடர்பான விவரங்களையும் இந்த வழக்கில் இணைத்து தாக்கல் செய்ய, மனுதாரர்களுக்கு அனுமதி வழங்குகிறது,’ என நேற்று உத்தரவிட்டனர்.

Related Stories: