×

விஜய் ஹசாரே டிராபி தமிழகம் அபார வெற்றி

இந்தூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. எமரால்டு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. பஞ்சாப் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 71 ரன் (84 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சன்விர் சிங் 58 ரன் (53 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), குர்கீரத் சிங் மான் ஆட்டமிழக்காமல் 139 ரன் (121 பந்து, 14 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினர். அடுத்து களமிறங்கிய தமிழகம் 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து வென்றது. அருண் கார்த்திக் 5, நாராயண் ஜெகதீசன் 101 ரன் (103 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்), பாபா அபராஜித் 88 ரன் (115 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஷாருக் கான் 55 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), இந்திரஜித் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழகம் 4 புள்ளிகள் பெற்றது. இஷான் அதிரடி: இந்தூரில் நடந்த மற்றொரு பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 324 ரன் வித்தியாசத்தில் மத்தியப் பிரதேச அணியை பந்தாடியது. டாஸ் வென்ற ம.பி. அணி முதலில் பந்துவீச, ஜார்க்கண்ட் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷண் 173 ரன் (94 பந்து, 19 பவுண்டரி, 11 சிக்சர்), குஷக்ரா 26, விராத் சிங் 68, சுமித் குமார் 52, அனுகுல் ராய் 72 ரன் (39 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினர்.

அடுத்து 423 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறகிய ம.பி. அணி 18.4 ஓவரிலேயே 98 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. அபிஷேக் பண்டாரி 42, வெங்கடேஷ் 23 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). ஜார்க்கண்ட் பந்துவீச்சில் வருண் ஆரோன் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். குஜராத், ஐதராபாத், பரோடா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கேரளா, ரயில்வேஸ் அணிகளும் நேற்று வெற்றியைப் பதிவு செய்தன. 


Tags : Tamil , Vijay Hazare Trophy Tamil Nadu is a huge success
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு