கரூரில் காந்தி சிலை மாற்றம் தரமற்ற கட்டுமானம் எதிர்த்து தர்ணா ஜோதிமணி எம்.பி கைது: குண்டுகட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு

கரூர்: கரூரில் பழைய காந்தியை சிலையை அகற்றி தரமற்ற முறையில் பீடம் கட்டி புதிய வெண்கல சிலை அமைத்ததை கண்டித்து நேற்று தர்ணாவில் ஈடுபட்ட எம்பி ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் சிறிய ரவுண்டானாவில் 67 ஆண்டுகள் பழமையான காந்தி இருந்தது. இந்த சிலைக்கு முக்கிய நாட்கள், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் காங்கிரஸ் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக, ரவுண்டானாவை சுற்றிலும் மறைப்பு ஏற்படுத்தி, காந்தி சிலை அகற்றப்பட்டு, புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நேற்று முன்தினம் காங்கிரசார், திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் குவிந்து முறையான பணி அனுமதியை காட்ட வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பணிக்கான ஒர்க் ஆர்டர் வாங்கி தருவதாக கூறினர். ஆனால், இரவோடு இரவாக முழு உருவ வெண்கலத்தால் ஆன புதிய காந்தி சிலையை நிறுவி உள்ளனர். சிலையின் பீடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதை கண்டித்து காந்தி சிலை முன் நேற்று காலை எம்.பி. ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜோதிமணி, திமுக நகர பொறுப்பாளர்கள் ராஜா, அன்பரசன் உள்பட 67 பேரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.  

இதுகுறித்து, ஜோதிமணி கூறுகையில், ‘‘பெண் எம்.பி. என்று பார்க்காமல் போலீசார் என் மீது கை வைத்து குண்டு கட்டாக தூக்கியுள்ளனர். இது கண்டித்தக்கது. அராஜக அதிமுக  ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’’ என்றார். கே.எஸ்.அழகிரி கண்டனம்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சிலையை தரமற்ற வகையில் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், காந்தியின் சிலைக்கு அமைக்கப்படுகிற அடித்தளம் வலுவானதாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து ஜோதிமணி போராட்டம் நடத்தினார். ஆனால், ஜோதிமணியை பலவந்தமாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

Related Stories:

>