×

புதுவை கவர்னர் மாளிகையில் வட மாநில ஊழியர்கள் பணிநிரந்தரம்: இளைஞர்கள் கொந்தளிப்பு

புதுச்சேரி:  புதுச்சேரி கவர்னர் மாளிகையில் வடமாநில ஊழியர்கள் 3 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்களை கொந்தளிப்புக்கு ஆளாக்கி உள்ளது. புதுச்சேரியில் கவர்னராக பணியாற்றிய கிரண்பேடி சில தினங்களுக்கு முன் குடியரசு தலைவரால் நீக்கப்பட்டார். மரபை மீறி அவர் இன்னும் ராஜ்நிவாஸில் இருந்து வெளியேறாமல் அங்குள்ள விருந்தினர் மாளிகையிலே தங்கியுள்ளார். நாளை அவர் புதுச்சேரியிலிருந்து விடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே கவர்னர் மாளிகையில் பணியாற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்களை அதிருப்திக்குள்ளாகி உள்ளது. ஏற்கனவே கவர்னர் மாளிகையில் பணியாற்றிய அரசு, சார்பு நிறுவன ஊழியர்களை முதல்வர் குற்றச்சாட்டின்பேரில் அவர் திருப்பி அனுப்பியிருந்தார்.

பின்னர் பாசிக் நிறுவனத்தில் பணியாற்றிய வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பேரை பணி நிரந்தரம் செய்து, பிப்ரவரி 15ம் தேதியிட்ட உத்தரவை கவர்னர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது. இது புதுச்சேரி அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூரைச் சேர்ந்த பல இளைஞர்கள், இளம்பெண்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், முன்தேதியிட்டு இதுபோன்று பணி நிரந்தரம் செய்யப்படுவது தினக்கூலி, பகுதிநேர ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களும் கொந்தளித்துள்ளனர். இப்பிரச்னை வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும் என தெரிகிறது.

Tags : North ,State , Northern State Employees Retired at New Delhi Governor's House: Youth Turmoil
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...