×

ரஜினியுடன் கமல் திடீர் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். ரஜினி,  கமல் இருவரும் சினிமாவில் எதிர்எதிர் துருவங்களாக இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக தொடர்ந்து இருந்து வருகிறார்கள். ‘நான் ஒருபோதும் அரசியலில் குதிக்க மாட்டேன். 5 வருடத்திற்கு ஒருமுறை என் கை விரலை மையால் கறைபடுத்திக் கொள்வதை தவிர எனக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை’ என்று கமல் ஒருமுறை கூறியிருந்தார். ஆனால், ரஜினியை முந்திக் கொண்டு கமல்ஹாசன் மக்கள்  நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். ரஜினியும் கட்சி தொடங்கப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் நான் கூட்டணி வைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. தொடங்காவிட்டால் அவரது ஆதரவை கேட்பேன் என்று கமல் கூறினார்.

இதற்கிடையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவித்து விட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், ‘அரசியல் தொடர்பாக எடுத்தது அவரது தனிப்பட்ட முடிவு. அவரது உடல்நிலை அதை விட முக்கியம். என் கட்சிக்கு நல்லவர்களின் ஆதரவை கேட்டுப் பெறுவேன், அந்த வகையில் ரஜினியின் ஆதரவையும் கேட்பேன்’ என்றார். இந்நிலையில், கமல்ஹாசன் நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ‘இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமான அரசியல் சந்திப்பு இல்லை. தனிப்பட்ட முறையிலான சந்திப்பு’ என்று மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே சமயம், வரும் சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கமல் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Kamal ,Rajini , Kamal meets Rajini suddenly
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...