ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி அட்டகாசம் ரேஷன் கடை வாகனத்தில் திருப்பதி கோயில் லட்டு: வீடு வீடாக சென்று விநியோகம்

திருமலை: ஆந்திராவில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவர, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் ரேஷன் கடை வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர், ஜில்லா பரிஷத், மண்டல பரிஷத், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 2 கட்ட தேர்தல் நிறைவு பெற்றது. 3ம் கட்ட தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் புதுப்புது முறைகளை கையாண்டு வாக்காளர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்களில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி, வாக்கு சேகரிக்க கட்சியின் துண்டு பிரசுரத்துடன், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தையும் வீடு வீடாக வழங்கி வருகின்றனர். இதற்காக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு அரசு அளித்துள்ள வாகனங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்கு பக்தர்களும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Related Stories:

>