×

பணி நியமனத்தில் முறைகேடு, கொள்முதல் செய்வதில் ஊழல் சீரழிவை சந்தித்து வரும் போக்குவரத்துக் கழகம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியூ) பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார்

தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பஸ்சில் தினமும் 2.10 கோடி பேர் பயணம் செய்தனர். இந்த துறை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம், தமிழக மக்களுக்கு போக்குவரத்து சேவை அளிக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழகங்களை துவக்கியது. இப்போது அந்த நோக்கம் ஒரளவு நிறைவேறியுள்ளது. இந்தியாவில் சிறப்பான போக்குவரத்து சேவை தமிழகத்தில் தான் உள்ளது. அதே மாதிரி பல்வேறு பிரிவுகளுக்கான இலவச பயணம். 500 பேர் உள்ள கிராமங்களில் போக்குவரத்து சேவை அளிப்பது தமிழக போக்குவரத்து கழகம் தான். இந்தியா முழுவதும் ரயில்களில் தினமும் 2.45 கோடி பேர் பயணம் செய்கின்றனர். ஆனால், தமிழகத்திலேயே அவ்வளவு பேர் பஸ் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். 2016-17 வரைக்கும் தான் இந்த நிலைமை. ஆனால், அரசு எடுத்த தவறான நடவடிக்கை காரணமாக போக்குவரத்து துறை இப்போது கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 அரசு போக்குவரத்து துறையை அதிகமாக பயன்படுத்துவது ஏழை, எளிய நடுத்தர மக்கள் தான். 2.10 கோடி பேர் பயணம் செய்த நிலையில் தற்போது 1.10 கோடி பேர் தான் பயணம் செய்கின்றனர். கடந்த 3 வருடத்தில் ஒரு கோடி பயணிகள் அரசு பஸ் சேவையை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். 2018ல் பெரிய அளவு பாதிக்கப்பட்டது. 2018க்கு முன்னால் ஓரளவு சலுகை கட்டணத்தில் பேருந்து இயக்கப்பட்டது. ஆனால், 2018க்கு பிறகு அபரிமிதமான அளவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வால் உடனடியாக 60 லட்சம் பேர் பயணம் செய்வதை தவிர்த்து விட்டனர். நாங்கள் கட்டணத்தை உயர்த்தாதீர்கள் என்று கூறினோம். ஆனால், அரசு, போக்குவரத்துத்துறை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் போக்குவரத்து துறையை நடத்த முடியவில்லை என்று கூறினார்கள். இதனால், போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவதாக தெரிவித்தனர். ஆனால், இந்த கட்டண உயர்வுக்கு பிறகு பஸ் பயணிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது.  சென்னையில் ஒரு பஸ்சில் 300 கி.மீ வரை ஓட்டுகின்றனர். இதில் 1500 பேர் வரை பயணம் செய்தனர். இதன் மொத்த கலெக்‌ஷன் ரூ.7 ஆயிரமாக இருந்தது. இதே ஒரு ஆம்னி பஸ் சென்னை முதல் திருச்சி வரை 300 கி.மீ ஓட்டுகின்றனர். அதில், 40 பேர் மட்டும் தான் பயணம் செய்கின்றனர். இதில், 20 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது. அதனால், ரூ.15 ஆயிரம் வரை ஓடினால் தான் கட்டுப்படியாகும். ஆனால், 300 கி.மீ ஓடும் பஸ்சில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வருவாய் வருவதால் கட்டுப்படி ஆகவில்லை. எனவே, தனியார் பேருந்துக்கு இணையாக அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் செய்து தர வேண்டும். இதில், ஏற்படக்கூடிய பற்றாக்குறையை அரசு ஈடுகட்ட வேண்டும்.


ஆனால், அரசாங்கம் ஈடுகட்டாமல் தொழிலாளர்களுக்கு தர வேண்டிய தொகையை தராமல் செலவு செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் வேலை நிறுத்தத்தில் கூட ஈடுபட்டுள்ளோம். அரசு சார்பில் போக்குவரத்து துறைக்கு மானியம் தர வேண்டும். ஆனால், அரசு பெரிய அளவில் மானியம் எதுவும் தரவில்லை. மாறாக  அரசு போக்குவரத்து துறைக்கு கடன் வாங்கி தான் தந்தது. நாங்கள் கடன் வாங்கி தராதீர்கள். பட்ஜெட்டில் கூடுதலாக மானியம் ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தோம். இதற்கு முன்னர் ஒரு பஸ்சில் ரூ.100  கலெக்‌ஷன் ஆனால், ரூ.7 வரை வட்டி கட்டினோம். ஆனால், இப்போது ரூ.14 வரை வட்டி கட்ட வேண்டியுள்ளது.


 தமிழக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கிய மாதிரி போக்குவரத்து கழகங்கள் மூலம் கடன் தான் வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். வரும்  வருமானத்தில் பாதிபணம் வட்டிக்கு போய் சேர்ந்து விடுகிறது. இதனால், போக்குவரத்து கழகம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து கழகம் இழப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக 22 ஆயிரம் பஸ் ஓடியதை 20 ஆயிரம் பஸ்களாக குறைத்தனர். இதனால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. 2 பஸ் ஓடும் இடத்தில் ஒரு பஸ் ஓடினால் பயணிகள் எண்ணிக்கை அதில் அதிகமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், பஸ் குறைந்தவுடன் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. அவர்கள் மாற்று போக்குவரத்தை நோக்கி சென்று விட்டனர்.  போக்குவரத்து கழகங்களின் பஸ்சை பயன்படுத்தியதற்கு 2 காரணம். ஒன்று குறைந்த கட்டணம். இரண்டாவது அடிக்கடி பஸ் வசதி. 10 நிமிடம் மேல்  பஸ் நிலையத்திற்கு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்று வழியை தேடுவார்கள்.


அடுத்தடுத்து பஸ் வந்தால் ஏறி சென்று விடுவார்கள். இப்படி பயணிகள் எண்ணிக்கை குறையும் போது இழப்பு தான் அதிகமாகி விட்டது. பஸ் கட்டணத்தை உயர்த்தினால் கூட பழைய கலெக்‌ஷன் கூட வரவில்லை. பயணிகளை குறைத்து விட்டு பஸ் கட்டணத்தை உயர்த்தியதால் எந்த வித லாபமும் ஏற்படவில்லை. நாங்கள் பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தான் நல்லது என்று நாங்கள் சொல்வதை கேட்கவில்லை. மாறாக பஸ் கட்டணத்தை அதிகரித்து, பஸ் எண்ணிக்கையை குறைத்ததால் போக்குவரத்து கழகம் சிக்கலில் மாட்டி விட்டது.  அரசாங்கம் சார்பில் போதிய உதவிகள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தொழிற்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்கள் நகரங்களாக மாறி வருகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது என்றால் தமிழகத்தில் உள்ள போக்குவரத்து வசதி தான் காரணம். போக்குவரத்து வசதி இல்லாவிட்டால் கிராமப்புற மாணவர்கள், நகரத்தில் வந்து படித்து இருக்க மாட்டார்கள். அதனால், இது லாப நஷ்ட கணக்கு பார்க்கும் துறை கிடையாது. இந்த துறை நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியில் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தான் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று சொல்கிறார்கள். இந்த மாநிலங்களில் தான் அரசு போக்குவரத்து வசதி இருக்கிறது. அதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு அரசாங்கம் நஷ்டத்தை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பணி நியமனத்தில் முறைகேடு, அதிகாரிகள் போக்குவரத்து சாதனங்கள் கொள்முதல் செய்வதில் ஊழலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஆளும் கட்சியினருடன் கைகோர்த்து கொண்டு எல்லாவித தவறும் செய்கின்றனர். சின்ன விவகாரங்களுக்கு

கூட லஞ்சம் கேட்கின்றனர்.  ஏற்கனவே, பணி நியமனம் ஆணையம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் ஆணையம் மூலம் பணி நியமன ஆணை செய்வதில்லை. ஒவ்வொரு பணியாளர்கள் நியமனத்திற்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் வாங்கி கொண்டு ஆணை வழங்குகின்றனர். ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் நிர்வாக சீர்கேடு, வேண்டிய அதிகாரிகளை வைத்து நிர்வாகம் நடத்துவது, ஒரு முறையான பொதுப்போக்குவரத்து ெகாள்கை இல்லாதது எல்லாம் சேர்ந்து எந்த நோக்கத்துடன் பொது போக்குவரத்து கழகங்கள் ஆரம்பித்து வளர்ச்சி அடைந்ததோ, இப்போது அது தலைகீழாகி விட்டது. போக்குவரத்து என்பது சேவைத்துறை. அரசாங்கம் லாப நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை என்று அரசு கூறுகிறது. அதற்கான மானியம் அரசு தர வேண்டும். அதை விடுத்து கடன் வாங்கிக்கொள் என்று கூறினால் என்ன அர்த்தம்.

வருமானம் வட்டிக்கே சரியாகி விடுகிறது. இதனால், போக்குவரத்துகழகங்கள் சீரழிந்து விட்டது. ஒரு பஸ்சை 6 வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. 2011,12 வரைக்கும் வண்டிகளை மாற்றினார்கள். ஆனால், இப்போது ஓடும் வண்டியில் 40 சதவீதம் வண்டி 15 வருடம் மேல் ஓடிய வண்டி ஆகும். 15 வருடத்துக்கு மேல் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டால் 8 ஆயிரம் வாகனத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு புதிதாக பஸ் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பொது போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. விபத்து குறையும். அண்ணா பல்கலை சார்பில் சமீபத்தில் ஓர் ஆய்வு செய்தனர். டெல்லியில் ஒரு சிக்னலில் ஒரு நிமிடம் வண்டி நின்றால் 7 ஆயிரம் லிட்டர்  எரிபொருள் வீணாகிறது. அதே மாதிரி சென்னையில் உள்ள எல்லா சிக்னலில் ஒரு நிமிடம் வாகனம் நின்றால் 10 ஆயிரம் லிட்டர்  எரி பொருள் வீணாகும். இதனால், சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படும். போக்குவரத்துக்கு ஒரு முறையான கொள்கையை ஏற்படுத்த வேண்டும்.


Tags : Transport Corporation ,Anmana Nayayan ,Secretary General ,Transport Employees Federation ,CIDU ,Government of Tamil Nadu , Abuse in employment, corruption in procurement Transport Corporation facing deterioration: Tamil Nadu Government Transport Employees Federation (CITU) General Secretary Arumuga Nair
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...