×

நாளை முதல் அமலுக்கு வருகிறது மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. அதன் விளைவாகத்தான், இத்திட்டத்தின் கட்டம்-1 முழுமையாக முடிக்கப்பட்டு, பல்வேறு வழித்தடப் பகுதிகளில் 54.15 கி.மீ. நீளத்திற்கு பயணிகள் சேவை நடைபெற்று வருகின்றது. 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 க்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 29.6.2015ல் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் சேவையை துவக்கியது. 5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6ம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் கீழ்கண்டவாறு குறைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அதன்படி, 0-2 கிமீ வரை ரூ.10, 2-5 கிமீ வரை ரூ.20, 5-12 கிமீ வரை ரூ.30, 12-21 கிமீ வரை ரூ.40, 21-32 கிமீ வரை ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ‘கியூஆர்’ கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம்-1-இன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும். ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம் - 1 இன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 2500 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 2500 ரூபாய் கட்டணம்தான். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த ஆணை நாளை மறுநாள் (22ம் தேதி) முதல் அமலுக்கு வருகின்றது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Metro Rail ,Principal ,Edibati Palanisami , Metro train fare reduction to come into effect from tomorrow: Chief Minister Edappadi Palanisamy's announcement
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...