×

தெர்மோகோல் மாதிரியே வாக்குறுதியும் பறந்திருச்சு...!: - மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ, அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் கூடுதல் நகர் பகுதி உள்ள தொகுதியாக மதுரை மேற்கு தொகுதி உள்ளது. மதுரை மாவட்டத்தில் தொகுதி வரையரையில், திருப்பரங்குன்றம் தொகுதியை இரண்டாக பிரித்து இந்த மதுரை மேற்கு தொகுதி 2011ல் உருவாக்கப்பட்டது. மதுரை நகர், புறநகர் பகுதிகள் அடங்கிய இத்தொகுதியில், தற்போது 3,05,165 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 1,50,609,  பெண்கள் 1,54,522, இதர 4 என, கூடுதல் பெண் வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகவும் இருக்கிறது. தொகுதியில் தொடர்ந்து 2 முறை போட்டியிட்ட செல்லூர் ராஜூ வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார். தேர்தல் காலத்தில் அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் ஏராளம். கிராமப்பகுதிகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார். அமைச்சர் வசிக்கும் பகுதி உட்பட தொகுதியின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாகவே இருக்கிறது. வைகை ஆற்றங்கரையில் பெத்தானியாபுரம் முதல் துவரிமான் நான்கு வழிச்சாலை வரையிலான புதிய சாலை அமைக்கும் பணியும் இன்னும் துவக்கப்படவில்லை.

தொகுதிக்கு மட்டுமல்லாது, மதுரையின் நிலத்தடி நீராதாரமான தொன்மைமிக்க கிருதுமால் நதி கால்வாயாக சுருங்கிக் கிடக்கிறது. இது சரிவர தூர்வாராமல் 40 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. தொகுதியைச் சுற்றிலும் தண்ணீர் ஓடியும், இந்த நதி பாதைகளை சீரமைத்து தண்ணீர் ஓட அமைச்சரிடம் நடவடிக்கை இல்லை. காளவாசல் மேம்பாலத்தை தேனி ரோடு, அரசரடி பகுதி நோக்கி கட்டியிருந்தால், போக்குவரத்து நெரிசலை குறைத்திருக்கலாம். செலவிட்டு கட்டிய பைபாஸ் பாலத்தில் இயங்கும் வாகனங்கள் மிகக் குறைவானவை. திட்டமிடலின்றி தொகுதிக்குள் திட்டங்கள் பல பயனற்றுப் போயிருக்கிறது. தொகுதியில் நகர்ப்பகுதிகளில் சில வார்டுகளையே முக்கியத்துவம் தரப்பட்டு தொகுதி நிதி செலவிட்டதாகவும், பல வார்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ‘தொகுதிக்குள் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வைகை அணையை தெர்மாகோல் போட்டு மூடியது போலத்தான்... சொன்ன வேகத்துல காத்துல பறந்து போயிருச்சு...’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

பெரியாறு அணையில் இருந்து குடிநீர் திட்டம்
அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, ‘தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தெருக்களில் பேவர்பிளாக், சாலை வசதி, போர்வெல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கட்டிடங்கள், என தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 கோடி வரை செலவு செய்துள்ளேன். காளவாசல் போக்குவரத்து நெரிசலை குறைக்க பைபாஸ் ரோட்டில் ரூ.26 கோடி செலவில் மேம்பாலம், நிலையூர் கால்வாய் மூலம் மாடக்குளம் கண்மாயில் தண்ணீர் நிரந்தரமாக நிரப்பப்பட்டுள்ளது. எனது தொகுதி உள்பட மதுரை மாநகரின் 100 வார்டுகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.1,265 கோடி மதிப்பீட்டில், பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டப்பணி நடந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.900 கோடியில், பெரியார் பஸ் நிலையம் புதுப்பித்தல், மாசி வீதிகள் சீரமைப்பு, வைகை ஆற்றின் இரு கரைகளை நான்கு வழிச்சாலையாக மாற்றுதல் போன்ற பணிகள் எனது முயற்சியில் நடந்து வருகிறது’ என்றார்.

வாக்களித்த மக்கள்விழி பிதுங்கி நிற்கின்றனர்
கடந்த தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாசுகி கூறும்போது, ‘தேர்தலின்போது அமைச்சர் செல்லூர் ராஜூ கண்மாய்களை தூர்வாரி மேம்படுத்துவேன் என்றார். எதுவும் செய்யவில்லை. குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா வகை மாற்றம் செய்து கொடுப்பதாக சொன்னார். சோலை அழகுபுரம், முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் நம்பி ஏமாந்துள்ளனர். குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொகுதியின் கிராமப்பகுதிகளில் மிக மோசமாக உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தும், ரேஷன் பொருட்கள் தேவைக்கான விநியோகம் இல்லை. ஆயிரம் கார்டுகளுக்கு, 600 கார்டுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. பல கடைகள் திறப்பதில்லை உள்ளிட்ட ஏழை மக்களை பாதிக்கும் விஷயங்கள் தொகுதிக்குள் ஏராளம்’ என்றார்.


Tags : Madurai West constituency ,Minister ,Chellur Raju , Like a thermocol Promise flies ...!: - Madurai West Constituency MLA, Minister Cellur Raju
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...