அதிகரிக்கும் யானை-மனித மோதல் 5 ஆண்டுகளில் 2,529 பேர் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

சென்னை: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பு, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகளால் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுகின்றன. அப்படி யானைகள் வெளியேறும்போது யானை-மனித மோதல் நடக்கிறது. இதில் யானைகளால் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும், மனிதர்கள் யானைகளை துன்புறுத்தி துரத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கு வங்க எம்பி ராஜூ பிஸ்தா, இந்தியாவில் காட்டு விலங்குகள் மனிதர்களை தாக்கிய சம்பங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் யானை தாக்கியதால் மட்டும் 2,529 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தமட்டில் 246 பேர் கடந்த 5 ஆண்டுகளில் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். 2016 முதல் 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் யானை தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50க்கு குறைவாக இருந்து வந்தது.

இது கடந்த ஆண்டு முதல்முறையாக 50ஐ தாண்டியுள்ளது. மேலும் அமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது பதிலில் ஒவ்வொரு மாநிலமும் விலங்கு-மனித மோதலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தமிழகத்தில் இவ்வாறு யானை-மனித மோதல் அதிகமாக நடப்பதை வரும் காலங்களில் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு யானைகள் வாழக்கூடிய காடுகளை மனிதர்கள் அழிப்பதே முக்கிய காரணமாக இருக்கிறது. வனப் பகுதிகளுக்குள் சாலைகள் அமைக்கும் போதும், ரயில்வே தண்டவாளம் அமைக்கும் போதும் பாலம் மூலமாக சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அப்போது காடுகள் அழிப்பது தவிர்க்கப்படும். பாலத்திற்கு கீழே உள்ள யானைகளின் வழித்தடங்களில் பிரச்னை ஏற்படாது. அப்போது, அவை வெளியில் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>