×

மார்த்தாண்டத்தில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை ஜேசிபி மூலம் அகற்றம்: பல லட்சம் ரூபாய் வீண்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடையில் இருந்து பெரும்புளி வழியாக சிராயன்குழி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ரோடு உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக பெயர்ந்து குண்டும், குழிகளுமாக காட்சி அளித்தது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் மார்த்தாண்டம் மேம்பாலப்பணி நடந்தபோது இந்த சாலை செப்பனிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி இரவோடு இரவாக இந்த ரோட்டை மீண்டும் செப்பனிடப்பட்டிருந்தது. காலையில் ரோடு செப்பனிடப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதியை மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  ஆனால் செப்பனிடப்பட்டிருந்த ரோடு ஆங்காங்கே தார் பெயர்ந்து கிடந்தது. இரவோடு இரவாக அரைகுறையாக இந்த ரோடை செப்பனிட்டு சென்றிருந்தனர்.

வேறு பகுதியில் ரோடு போட முயன்ற போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தார் கலவையை இங்கு கொண்டு போட்டதாகவும், அந்த தார் கலவை தரமற்றதாகவும், அதிகாரிகளின் மேற்பார்வை இன்றியும் போட்டதால் ஒரு சிலமணி நேரத்தில் பெயர்ந்து விட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துவிட்டு இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அவர்கள் கூறி சென்றனர். தற்போது அந்த சாலையில் பெயர்ந்து கிடந்த தார் கலவையை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதனால் பல லட்சம் ரூபாய் அரசு பணம் வீணாகி உள்ளது. எனவே தரமற்ற சாலை பணி செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது, இதற்கு உடந்தையாக இருந்த தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Marthandland ,JCB , Disposal of substandard road in Jharkhand by JCP: Millions of rupees wasted
× RELATED நெல்லையில் ரூ.2 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு..!!