×

பேரவை தேர்தலுக்கு மத்தியில் இன, வகுப்புவாத உணர்வுகளை தாண்டி ரத்தத்தால் எழுதப்படும் மேற்குவங்க தேர்தல் வரலாறு: காங்கிரஸ், இடதுசாரிகளை வீழ்த்திய திரிணாமுல் கட்சிக்கு என்ன நடக்கும்?

கொல்கத்தா: இன, வகுப்புவாத உணர்வுகளை தாண்டி அரசியல் உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட மேற்குவங்க மாநில பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகளை வீழ்த்திய திரிணாமுல் கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெறுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் அரசியல் கலாசாரம் என்பது மோதல், வன்முறையால் ஏற்படும் ரத்தத்தால் எழுதப்பட்டது. சிறிய அளவிலான பேரணி, கூட்டங்கள் கூட பெரும் வன்முறை வெடித்துவிடும். அரசியல் ரீதியான தாக்குதல்கள், பரஸ்பர மோதல்கள், எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்கள் போன்றவை மேற்குவங்க அரசியல் களத்தில் அன்றாடம் காணும் காட்சிகள் தான். பெரும்பாலான மோதலுக்கான காரணங்களை பார்த்தால், அவை அரசியல் ரீதியாக தொடர்புடையதாகவே உள்ளன. இங்கு, இன, வகுப்புவாத ேமாதல்களை காட்டிலும், அரசியல் ரீதியான உணர்வுகள் மக்களுக்கு அதிகமாக உள்ளது.

இம்மாநில மக்களின் அரசியல் வரலாற்றை பார்க்கும் போது, 1967ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் செல்வாக்கு பெற்ற நக்சல்பாரி இயக்கத்தின் புதிய அரசியல் காலூன்றிய போது வன்முறையால் ஏற்பட்ட பலிகள், தேபாகா இயக்கம் எனப்படும் விவசாய போராட்டம் 1946 - 48ல் நடந்தபோது ஏற்பட்ட ரத்தக்களரியில் பலிகள், 1953ம் ஆண்டில், கொல்கத்தாவில் ‘டிராம்’ சேவை கட்டணம் உயர்வை எதிர்த்து நடந்த போராட்டத்தில் நடந்த பலிகள் கணக்கில் அடங்காதவை. 1959ம் ஆண்டில், பொது விநியோக முறை போராட்டம் ஏற்பட்ட காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது. அதன்பின்னர் 1967ம் ஆண்டு வாக்கில் நக்சலைட் இயக்கம் தொடங்கியதால் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். அரசியல் கொலைகளின் பட்டியலை பார்த்தால், 1971ல் ஃபார்வர்ட் பிளாக் தலைவரான ஹேமந்த் பாசுவின் கொலை, 1970ல் அஜித் குமார் பிஸ்வாஸ் கொலைகளை கூறலாம்.

1990ல் இன்றைய முதல்வர் மம்தா பானர்ஜி மீது சிபிஐ (எம்) அமைப்பின் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு தொண்டர்கள் அவரை தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. இந்த சம்பவம் ஆளும் இடதுசாரி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, இடதுசாரிகளுக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தின் முகமாக மம்தாவை மாற்றியது. இந்த சம்பவம் மம்தாவை மண்ணின் தலைவியாக அடையாளப்படுத்தியது. இதேபோல், 1996 ஜூலை 21 அன்று, இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தை ​​மம்தா வழிநடத்தினார். அப்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் மம்தா பானர்ஜி காங்கிரசிலிருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.

2006 மற்றும் 2008ம் ஆண்டுக்கு இடையில், சிங்கூர் மற்றும் நந்திகிராமில் நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் சிபிஐ (எம்) - திரிணாமுல் காங்கிரஸ் இடையே வன்முறை ஏற்பட்டது. அடுத்த போராட்டங்களால் சில மாதங்களில் 70 பேர் பலியானதாக அறிக்கைகள் மதிப்பிட்டுள்ளன. அதன்பின், 2009ம் ஆண்டில், மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நிருபம் சென் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் செல்லும் வழியில் கண்ணிவெடிகள் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. மேற்கு வங்க அரசியலில் வன்முறை என்ற நோய் இன்று வரை தொடர்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நிதிதா ரயில்நிலைய பிளாட்பார்மில் அமர்ந்திருந்த ஆளும் திரிணாமுல் அமைச்சர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த நேரத்தில் தான் மேற்குவங்க பேரவைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளன.

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்க மாநிலமானது 1952ம் ஆண்டு முதல் சட்டப் பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. 295 உறுப்பினர்கள் கொண்ட ேபரவையில் 294 பேர் மக்களால் நேரடியாகவும், ஒருவர் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமன உறுப்பினராக பரிந்துரைக்கப்படுகிறார். மக்களவைக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 42 உறுப்பினர்களும், மாநிலங்களவைக்கு 16 உறுப்பினர்களும் நியமிக்கப்படுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்), இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) ஆகியவை மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளாகும். தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) என்ற கட்சி, மாநிலத்தின் முதல் பிராந்திய கட்சியாக 1998ல் உதயமானது. 1960ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தாலும் கூட, அதன்பின் 1970ம் ஆண்டுகளுக்கு பின் இடதுசாரிகளின் கோட்டையாக மேற்குவங்கம் மாறியது.

சிபிஎம்மின் மூத்த தலைவர் ஜோதிபாசு 1977 முதல் 2000ம் ஆண்டு வரை கிட்டதிட்ட 23 ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்தார். இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக களம்கண்ட மம்தா பானர்ஜியின் கட்சி 2011ல் ஆட்சியை பிடித்தது. இடதுசாரிகளின் 34 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின், 2014ல் நடந்த மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் 34 இடங்களையும், இடதுசாரிகள் இரண்டு இடங்களையும், காங்கிரஸ் நான்கு இடங்களையும் கைப்பற்றின. அதன்பின் 2016ல் ஏப். 4 முதல் மே 5 வரை 6 கட்டங்களாக நடந்த மேற்குவங்க பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் மம்தா தலைமையிலான கட்சியே ஆட்சியை பிடித்தது. 2011ம் ஆண்டு தேர்தலை போன்று அல்லாமல், காங்கிரசுடன் கூட்டணியை தவிர்த்து திரிணாமுல் தனித்து போட்டியிட்டு 210 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 44 இடங்களுடன் இரண்டாவது இடத்திலும், 33 இடங்களுடன் இடதுசாரிகள் மூன்றாம் இடத்திற்கும் சென்றன.

இந்த தேர்தலில் வெறும் 1.1 சதவீத வாக்குகளை பெற்று பாஜக 3 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2011 தேர்தலில் 4.06 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம் 2016ல் 10.8 சதவீதமாக அதிகரித்தது. 2009ல் நடந்த மக்களவை தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வென்ற பாஜக 2014ல் நடந்த தேர்தலில் இரு இடங்களில் வென்றது. அதன்பின் 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 18 இடங்களையும், ஆளும் திரிணாமுல் 22 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றின. இடதுசாரிகள் இந்த தேர்தலில் ஒரு இடங்களை கூட பிடிக்கவில்லை.  ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கம், பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கைக்கு சென்றது. ஆனால், இன்று திரிணாமுல் கட்சிக்கு பாஜக பெரும் சவாலாக மாறிவிட்டது. மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் பகைமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், மத்தியில் ஆளும் பாஜக பக்கம் மேற்கு வங்கத்தின் இடதுசாரிகள் சாய்ந்து வருகின்றனர்.

இது, சித்தாந்த ரீதியிலான எதிரியான பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது. ஜோதிபாசு முதல்வராக இருந்த வரை சிபிஎம் வலுவான கட்சியாக இருந்ததுடன், மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே செயல்பட முடியாத அளவிற்கு பலமாக இருந்தது. 2000 முதல் 2011 வரை அப்போதைய முதல்வராக இருந்த புத்ததேவ் ஆட்சிக் காலத்தில்தான், மம்தா பானர்ஜி செல்வாக்கு அதிகரித்தது, அதன்பின் நடந்த பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் வளர்ச்சியை கண்டாலும் கூட, வரும் மார்ச், ஏப்ரலில் நடக்கவுள்ள பேரவை தேர்தல் மம்தாவுக்கு பெரும் சவாலாக மாறிவிட்டது. பாஜகவுக்கு எதிராக தேர்தல் வியூகங்களை வகுக்க முடியாமல் தவித்து வருகிறார். காரணம், கட்சியின் அனைத்து மட்டத்திலும் அமைச்சர் முதல் கிளை நிர்வாகிகள் வரை கும்பல் கும்பலாக கட்சியைவிட்டு வெளியேறி பாஜக பக்கம் சாய்கின்றனர். இது கட்சிக்கு பெரும் சவாலாக மாறிவருகிறது.

சிறுபான்மையினரின் ஆதரவு மம்தாவுக்கு இருந்தாலும் கூட, இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணியில் மதகுரு அப்பாஸ் சித்திகி தலைமையிலான இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்) புதிய தலைவலியாக மாறியுள்ளது. சிவப்புக் கொடியேந்தி கோஷமிட்ட தொண்டர்கள் பலரும் காவிக்கொடியுடன் மம்தாவை எதிர்த்துப் போராடுகின்றனர். இந்த வித்தியாசமான காட்சியே மேற்குவங்க அரசியல் செல்லும் திசையைக் காட்டுகிறது. இயக்க ரீதியாகவும், மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றிருந்த இடத்தை பாஜக கைப்பற்ற முனைகிறது. மேலும், மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் திராணி பாஜகவுக்கு மட்டுமே இருப்பதாக திரிணாமுல் கட்சியின் அரசியல் எதிரிகளே கருதுகின்றனர். அதாவது, திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறிய அதிருப்தி தலைவர்களான முகுல்ராய் தொடங்கி பலரை கூறலாம்.

பாஜக என்ற கட்சி உருவாவதற்கு அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்திய பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமபிரசாத் முகர்ஜி, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அம்மாநில மக்களின் மனநிலை தற்போது புதிய திசையை நோக்கி பயணிக்கிறது. முதல்வர் மம்தா ஆட்சிக்கு முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு ஆட்சி, அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான படை மேற்குவங்கத்தில் இறங்கியுள்ளது. கடந்த ஒருசில மாதங்களில் 5 முறை மேற்குவங்கம் சென்று வந்த அமித் ஷா, தங்களது கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கவில்லை.

அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் தேர்தல் அட்டவணைபடி கிட்டதிட்ட 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இருந்தாலும் கூட, அதுவரை எத்தனை வன்முறை, அரசியல் பழிவாங்கல், கொலை சம்பவங்கள் நடைபெறுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தேர்தல் ஆணையமும் மேற்குவங்கத்திற்கு கூடுதல் படைகளை அனுப்பி தேர்தலை அமைதியாக நடத்திட முயற்சிகளை செய்து வருகிறது. எப்படியாகிலும் மேற்குவங்கத்தை பொருத்தமட்டில் ஆளும் மம்தா அரசு, இந்த தேர்தலை கடந்த 2016 பேரவை தேர்தலை போன்று எளிதாக கடந்து ெசன்று ஆட்சியை மீண்டம் தக்கவைப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும்.

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார்?
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல், காங்கிரஸ் - இடதுசாரி - இந்திய மதச்சார்பற்ற முன்னணி - எய்ஐஎம் கூட்டணி, பாஜக என்று மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடுமையான போட்டி என்று பார்த்தால் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே உள்ளது. பாஜக தனது முதல்வர் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், 6 பேரின் பெயர்கள் முதல்வர் பட்டியலில் உள்ளன. இவர்களுடன் சேர்ந்து மண்ணின் மைந்தனான முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி பெயரும் அடிபடுகிறது.

* மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் முதலிடத்தில் உள்ளார். மாநில பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியாவுடன் இணைந்து மம்தாவுக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

* தேசிய துணை தலைவராக உள்ள முகுல் ராய், திரிணாமுல் கட்சியை விட்டு வெளியேறிய முதல் தலைவராவார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மாநிலங்களவை எம்பியாகவும், ரயில்வே அமைச்சராகவும் இருந்தார். சாரதா சிட் பண்ட் நிதி ஊழலில் சிபிஐ சம்மன் அனுப்பியது முதல், மம்தாவுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டது. இவருக்கு எதிராக சாரதா சிட்பண்ட், நாரத நிறுவன மோசடி வழக்குகள் உள்ளன.

* கடந்த 2 மாதங்களுக்கு முன் திரிணாமுலில் இருந்து வெளியேறிய முக்கிய அமைச்சர் சுபேந்து அதிகாரி என்பவர்தான். டிசம்பர் 19ல்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் சில எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு பாஜகவில் இணைந்தார். 2007ல் நடந்த நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்த தலைவராவார். இவருக்கும், மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், கட்சியில் இருந்து வெளியேறினார்.

* பிரபல பத்திரிகையாளரும், பத்ம பூஷண் விருது பெற்ற ஸ்வப்பன் தாஸ்குப்தா, மாநிலங்களவை எம்பியாக இருந்தவர், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நெருக்கமாக உள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொல்கத்தா வந்த போது, அப்போது நடந்த கூட்டத்தில் முக்கிய உரையாற்றினார்.

* பாஜக பொதுச்செயலாளரும் ஹூக்ளி எம்பியுமான நடிகை லோக்கெட் சாட்டர்ஜி, கட்சியின் தலைமைக்கு நம்பிக்கை பெற்றவராக உள்ளார். மம்தாவுக்கு மாற்றாக லோக்கெட் சாட்டர்ஜியை பாஜக முன்னிலைபடுத்தி பிரசாரம் செய்து வருகிறது.

* மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் தேப சவுத்ரி, முதன்முறையாக எம்பியாக தேர்வு ெசய்யப்பட்டவர். ஆர்எஸ்எஸ், அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிபிபி) ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார்.

அமித் ஷாவுக்கு சம்மன்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும், முதல்வர் மம்தா பானர்ஜின் உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக  ஆகஸ்ட் 11, 2018 அன்று கொல்கத்தாவின் மாயோ சாலையில் நடந்த பாஜகவின் பேரணியில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக சில அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பான அவதூறு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதையடுத்து அமித்ஷா வரும் 22ம் ேததி (நாளை மறுநாள்) நேரில் ஆஜராக கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Trinamul ,leftists , West Bengal election history written in blood beyond racial and communal sentiments in the midst of Assembly elections: What will happen to the Trinamool party that toppled the Congress and the Left?
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...