×

செய்யாறு அடுத்த பாவூர் கிராம விவசாய நிலத்தில் வெட்ட வெளியில் நந்தி சிலையுடன் சிதிலமடைந்து கிடக்கும் சிவலிங்கம்-கிராம மக்கள் கோரிக்கை

செய்யாறு : செய்யாறு அடுத்த பாவூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வெட்டவெளியில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் சிவலிங்கம், நந்தி பகவானை கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில் அங்கு அறநிலையத்துறையும், தொல்லியல்துறையும் ஆய்வு செய்து, சிலைகளை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி வர, சிவனின் அடிமுடி தேடி இருவரும் புறப்பட்டனர். விஷ்ணு வராக உருவில் சிவனின் அடியை தேட, பிரம்மன் அன்னமாக மாறி முடியை தேடினான். இருவருமே அடிமுடியை காணாதவாறு அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்த திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில், பண்டைய தொண்டை மண்டலத்தில் பல்லவர்களாலும், சோழர்களாலும் ர்மாணிக்கப்பட்ட சைவ, வைணவ கோயில்களும், சமணர் கோயில்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள பிரம்மதேசத்தில்தான் உலகம் முழுவதையும் தனது கடற்படையை நடத்தி சென்ற ராஜேந்திரசோழன் தனது இறுதி காலத்தை மனைவியுடன் கழித்தான்.

இத்தகைய சிறப்புமிக்க வெம்பாக்கம் அடுத்த பாவூர் கிராமத்தில், விவசாய நிலத்தில் வெட்டவெளியில் சிதிலமடைந்த நிலையில் மிகவும் பழமைவாய்ந்த சிவலிங்கமும், அதனை நோக்கிய நிலையில் நந்தி பகவான் சிலையும் உள்ளது. பல நூற்றாண்டுகளாக இச்சிலைகள் இப்படி நிலத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதோஷம், சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் அக்கிராம மக்கள் சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். பொதுவாக பின்னமான சிலைகளை வணங்கக்கூடாது என்பது நியதி. இங்குள்ள லிங்க பாணம் முழுமையாக இருக்கும் நிலையில் அதன் ஆவுடையார் மட்டும் உடைந்த நிலையில் உள்ளது. இச்சிலையின் அமைப்பு சோழர் காலத்தை நினைவுப்படுத்துவதால் ஒரு காலத்தில் இங்கு கோயில் இருந்திருக்கலாம். கோயில் நாளடைவில் சிதிலமடைந்து இச்சிலைகளை தவிர்த்து பிற இடங்கள் வேளாண் நிலங்களாக ஆகியிருக்கலாம். அல்லது சிலைகள் பின்னமானதால் கோயிலில் இருந்து அகற்றி இங்கு வந்து வைத்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆர்வலர்கள்.

எனவே, இங்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொணருவதுடன், சிதிலமடைந்த நிலையில் உள்ள ஆவுடையாருக்கு பதில் புதிய ஆவுடையாருடன் லிங்கபாணத்தை இணைத்து கோயிலை கட்டி தொடர்ந்து வழிபட வழியமைத்துதர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் நாகப்பன் கூறுகையில், `நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாசன் என்பவரிடம் இருந்து இந்நிலத்தை வாங்கினேன். அப்போதிருந்தே நிலத்தில் சிவலிங்கம், நந்தி சிலைகள் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாகவே இந்த சிலைகள் வெட்டவெளியிலேயே காணப்படுகிறது.

இதற்கு முன்பு நிலத்தை வைத்திருந்தவரும் சிலைகளை அகற்ற முயற்சி செய்யவில்லை. சிலைகள் இருப்பது தெரிந்தே தான் நான் நிலத்தை வாங்கினேன். நானும் சிலைகளை அகற்றவில்லை. சுவாமி சிலைகள் எங்களது நிலத்தில் இருப்பதால் எங்களால் முடிந்த பூஜைகளை செய்து வழிபட்டு வருகிறோம். கிராம மக்களும் விசேஷ காலத்தில் சிவலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். யாரையும் நாங்கள் தடுப்பது கிடையாது’ என்றார்.

Tags : Sivalangam ,Sidilamatam ,Nandhi ,Bauur , Seiyaru: The Shivalingam, Nandi Bhagavan, in a dilapidated condition on a farmland in the village of Paoor
× RELATED மழை காரணமாக திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு