×

களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நாளை தொடக்கம்-இன்று சிறப்பு பயிற்சி

களக்காடு : களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நாளை (21ம் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு இன்று சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 500 ச.கி.மீ பரப்பளவில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, யானை, கரடி, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்தாண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு நாளை (21ம்தேதி) தொடங்கி 27ம்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பணியில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நலஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் ஈடுபடுகின்றனர். இவர்கள் 20 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒருகுழுவில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், இயற்கை நலஆர்வலர்கள் என 4 முதல் 5 பேர் இடம்பெறுவர்.
கணக்கெடுப்பு குழுவினர்களுக்கு இன்று (20ம்தேதி) களக்காடு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது பற்றி விஷேச பயிற்சி அளித்து பின்னர் அவர்கள் களக்காடு, திருக்குறுங்குடி கோதையாறு வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

களக்காடு வனசரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்தில் 7 குழுவினரும், கோதையாறு வனசரகத்தில் 6 குழுவினரும் 27ம்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துவர். கணக்கெடுப்பு பணிக்கு செல்போன் ஆப்பும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள 70 இடங்களில் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்படுகிறது. கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் மற்றும் தானியங்கி கேமராக்களில் பதிவாகும் வனவிலங்குகளின் படங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன்பிறகு வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்றும் ஆய்வு முடிவுகளை தேசிய புலிகள் ஆணையம் அறிவிக்கும் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தெரிவித்தார்.

கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு நாளை (21ம்தேதி) முதல் 27ம்தேதி வரை களக்காடு தலையணை மற்றும் திருக்குறுங்குடி வனப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

18 புலிகள், 80 சிறுத்தைகள்

களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2012ல் 10 புலிகளும், 2013ல் 11 புலிகளும், 2014ல் 14 புலிகளும் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது சுமார் 16 முதல் 18 வரையிலான புலிகள், 80 சிறுத்தைகள், 50 யானைகள் வரை உள்ளன. இக்காப்பகம் 448 அரிய வகை தன்னகத்தன்மை கொண்ட தாவர இனங்களையும், 103 தன்னகத்தன்மை கொண்ட விலங்கினங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கவால் குரங்குகள்

இப்புலிகள் காப்பகம் சிங்கவால் குரங்குகளின் வாழ்விடமாக அமைந்துள்ளது. உலகளவில் 4 ஆயிரம் சிங்கவால் குரங்குகளே உள்ள சூழ்நிலையில் இங்கு மட்டுமே அவை 450 எண்ணிக்கைக்கு மேல் காணப்படுகின்றன. இந்த சிங்கவால் குரங்கு 200க்கும் மேற்பட்ட தாவர வகைகளை தன் உணவாக உட்கொள்கின்றது என்ற தகவல் இவ்வனப்பகுதியின் உயிர்பன்மைக்கு ஓர் சான்று.

Tags : Tigers Archive , Kalakkad: The wildlife census at the Kalakkad Tiger Reserve begins tomorrow (21st). Survey in turn
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில்...