×

தென்மாநிலங்களில் அதிக அளவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது...! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டெல்லி: தென்மாநிலங்களில் என்440கே என்ற உருமாறிய கொரோனா வைரசானது அதிக அளவில் பரவி வருகிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அமைந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில் கொரோனா வைரசின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  கடந்த ஆண்டு இந்தியாவில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகளாக வெளியிடப்பட்டு உள்ளன.

இந்தியாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரசின் வகைகளை பற்றியும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது பற்றியும் முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. இதுபற்றி அந்த மையத்தின் இயக்குனர் மற்றும் ஆய்வின் தலைவரான டாக்டர் ராகேஷ் மிஷ்ரா கூறும்பொழுது, புதிய வகை கொரோனா வைரசுகள் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி அச்சுறுத்தலாக உள்ளன.  

அடையாளம் காணப்பட்ட அந்த வகை வைரசுகள் இந்தியாவில் குறைந்த அளவிலேயே பரவின. இவற்றில், அதிக பரவல் விகிதங்களை கொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்ப கூடிய வகைகளான, உருமாறிய இ484கே கொரோனா மற்றும் உருமாறிய என்501ஒய் ஆகிய வைரசுகளும் அடங்கும். எனினும், போதிய அளவு அவற்றின் தொடர்ச்சியை கண்டறியாமல் விட்டதும் இந்தியாவில் குறைந்த பரவலுக்கு காரணம்.  இந்த வைரசுகள் மற்றும் பிற புதிய வகை வைரசுகளின் ஜீனோம்களின் தொடர்ச்சியை வரிசைப்படுத்தி நாடு முழுவதும் துல்லியமுடன் அடையாளம் காண வேண்டிய அவசரம் ஏற்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

தென்மாநிலங்களில் என்440கே என்ற வைரசானது அதிக அளவில் பரவி வருகின்றன என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன.  அவற்றின் பரவல் பற்றி முறையாக புரிந்து கொள்வதற்கு நெருங்கிய கண்காணிப்பு அவசியம் ஆகிறது.  துல்லிய மற்றும் சரியான தருணத்தில், உருமாறிய புதிய வகை வைரசுகளை கண்டறிவது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.  அடுத்தடுத்து பேரிடர் நிகழாமல் தடுப்பதற்கு அது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : southwestern states , The highly mutated corona virus is spreading in the southern states ...! Scientists warn
× RELATED 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என சமூக...