×

திருவள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருவள்ளூர்: திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைபெற்றது. பேரணிக்கு கோட்ட பொறியாளர் பி.ஞானவேலு தலைமை தாங்கினார். திருவள்ளூர் உதவி கோட்டப் பொறியாளர்கள் ர.இன்பநாதன் முன்னிலை வகித்தார். இதில் மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கண்ணையன் பேரணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பேரணியில் உதவி கோட்டப் பொறியாளர்கள், அம்பத்தூர் மதியழகன், கும்மிடிப்பூண்டி பாலச்சந்தர், பொன்னேரி ஆண்டி, திருத்தணி தஸ்நவிஸ் பெர்னாண்டோ, பள்ளிப்பட்டு திருஞானசம்பந்தம், திருவள்ளூர் உதவி பொறியாளர்கள் ஆர்.ஜெயமூர்த்தி, ஆர்.ராஜ்கமல், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துக் கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

வீட்டில் 3.2 லட்சம் கொள்ளை
பூந்தமல்லி: மதுரவாயல் ஓடமா நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(30). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வெயியே உள்ள மறைவான இடத்தில் வைத்து வேலைக்கு  சென்றார். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு  அதற்குள்  வைத்திருந்த  சீட்டு பணம் 3.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்து தெரியவந்தது. ஆனால் பீரோவில்  மற்றொரு பகுதியில் வைத்திருந்த 15 சவரன் நகையை கொள்ளையர்கள்  கவனிக்காததால் தப்பியது. தகவலின்பேரில் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வீட்டின் சாவியை வைக்கும் இடம் தெரிந்து கொண்ட மர்ம  நபர்கள் யாரோ இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது.

தொழிலாளி தற்கொலை
ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூர் ஆர்.கே.ஜே.வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் சிவா(38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மஞ்சுளா, கோபித்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் கோயில்பதாகையில் வசிக்கும் தாய் வீட்டுக்கு சென்றார். இதனால், மனமுடைந்த சிவா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  வளசரவாக்கத்தை  சேர்ந்தவர் மோகன்(40). எலக்ட்ரீசியன்.   இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் போதையில் வீட்டின் அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்துள்ளார். தகவலறிந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி இறந்த நிலையில் மோகனின் உடலை  மீட்டனர்.

Tags : திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...