இடைப்பாடியில் அதிகாலை பயங்கரம் சுத்தியலால் அடித்து மகளை கொன்று விட்டு மாடியில் இருந்து குதித்து தந்தை தற்கொலை: கழுத்தை அறுத்துக் கொண்டு அலறியதால் பரபரப்பு

இடைப்பாடி: இடைப்பாடியில் நேற்று அதிகாலை, சுத்தியலால் அடித்து மகளை கொன்று விட்டு, மாடியில் இருந்து குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன் கழுத்தை அறுத்துக் கொண்டு, உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தகவல் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.  சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள தாதாபுரம் மணியகாரம்பாளையம் ஆதிகாட்டூரை சேர்ந்தவர் கோபால்(54). கடைகளுக்கு காய்கறி, பழங்கள் வாங்கிக் கொடுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மணி(50), கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு வெளியூர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர்களுக்கு ரமேஷ்கண்ணன்(18) என்ற மகனும், பிரியா(15) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் இடைப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரியில் தங்கி, வேலை பார்த்து வருகிறார். பிரியா தாதாபுரம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், கோபாலுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்துள்ளார். அடிக்கடி வீட்டில் உள்ள தனது மகன், மகளை கொன்று விடுவதாகவும், தான் மாடியில் இருந்து குதிப்பதாகவும் கூறி வந்திருக்கிறார்.

இதனால், அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன், மணி வேலைக்காக ஈரோட்டிற்கு சென்றுவிட்டார். ரமேஷ்கண்ணன், பேக்கரி வேலையை முடித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். இதனால், வீட்டில் கோபாலும், பிரியாவும் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில், கோபால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் கொட்டியபடி, அருகே வசிக்கும் அவரது தம்பி சுந்தரராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தம்பி மற்றும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் உறவினர்களை எழுப்பி, மகள் பிரியாவை சுத்தியலால் அடித்துக் கொன்று விட்டேன் எனக்கூறியுள்ளார்.  இதனால், பதற்றமடைந்த உறவினர்கள் கோபாலின் வீட்டிற்கு ஓடி வந்தனர். ஆனால், அதற்குள் கோபால் வேகமாக மாடியில் ஏறி குதித்தார். இதில், படுகாயமடைந்து இறந்தார்.  இதனிடையே, வீட்டின் உள்ளே உறவினர்கள் சென்றபோது, தலையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டு, பிரியா சடலமாக கிடந்தார். இதுகுறித்து இடைப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர், உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளை கொல்ல பயன்படுத்தப்பட்ட சுத்தியல் மற்றும் அவர் தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்ட சிறிய கத்தி ஆகியவற்றை, போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

புலம்பலை அஜாக்கிரதையாக  எடுத்துக் கொண்டதால் விபரீதம்

மகளை கொன்ற கோபால், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவுடன், அடிக்கடி தனது குடும்பத்தினரை கொன்று விட்டதாக வெளியூர் சென்றிருக்கும் மனைவி மற்றும் உறவினர்களுக்கு போனில் சொல்வாராம். ஆரம்பத்தில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரது பேச்சை புலம்பலாக எடுத்துக் கொண்டுள்ளனர். கடைசியில் இப்படி மகளை கொன்று, தற்கொலை செய்து கொண்டாரே எனக்கூறி உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். கோபாலின் பேச்சை அஜாக்கிரதையாக எடுத்து கொண்டோமே என்று கூறி அவர்கள் அழுதது சுற்றியிருந்தவர்களையும் கண்கலங்கச் செய்தது.

Related Stories:

>