உசிலம்பட்டியில் தொடரும் சோகம்: பெண் சிசுவை கொன்ற கொடூர பாட்டி கைது: பிறந்த 7 நாளில் பரிதாபம்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கே.பாறைப்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (34). இவரது மனைவி சிவபிரியா (28). இவர்களுக்கு ஏற்கனவே சிவாஷினி, வைரக்கொடி என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சிவபிரியா மீண்டும் கர்ப்பம் ஆனார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு சிவபிரியாவிற்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கருதி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் மூச்சு திணறச் செய்து  கொல்லப்பட்டது தெரியவந்தது.

குழந்தையின் பாட்டி நாகம்மாளிடம்  போலீசார்  விசாரித்தனர். இதில், அவர்தான் குழந்தையை மூச்சை பிடித்து கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து நாகம்மாளை கைது செய்தனர். உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசு கொலை சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>