×

டாக்டர் தொகுதி நலம்குன்றி கிடக்குங்க...!வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ டாக்டர் பரமசிவம்

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உளளன. இதில் வேடசந்தூர் நூற்பாலைகள் அதிகம் கொண்டதாக இருக்கிறது. இந்த மில் தொழிலாளர்களுடன், இப்பகுதியில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். நெல் உள்ளிட்ட தானிய விளைச்சல்களுடன், சூரியகாந்தி, தக்காளி, முருங்கை உள்ளிட்டவைகளும் அதிகளவு விளைகின்றன. இத்தொகுதியில் எந்த கட்சி வெல்கிறதோ, அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் நம்பிக்கையும் மக்களிடம் வழிந்தோடுகிறது. வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக டாக்டர் பரமசிவம் இருக்கிறார். இவரை எதிர்த்து கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிஸ் கட்சியை சேர்ந்த சக்திவேல் கவுண்டர் போட்டியிட்டார். தேர்தல் காலத்தில் அதிமுகவில் போட்டியிட்ட டாக்டர் பரமசிவம், வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளிக் கொட்டினார். தொகுதிக்குள் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் விநியோகம் செய்வேன் என்றார். இப்போதும் தொகுதி மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலைந்து திரிகின்றனர். அத்தனை சாலைகளையும் சீரமைப்பேன் என்ற எம்எல்ஏ பரமசிவம் அளித்த எந்த வாக்குறுதிகளும் முழுமை பெறவில்லை. பணிகள் நடந்த ஒரு சில இடங்களிலும் சாலைகள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டே ஓங்கி ஒலிக்கிறது.

நூற்பாலைகளை அதிகம் கொண்ட தொகுதிக்குள், தொழிலாளர்கள் நலன் காக்கும் திட்டங்கள் இல்லை. வேடசந்தூர் பகுதியில் விபத்துகள் ஏற்பட்டால், உரிய சிகிச்சை வழங்கிட அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லை. அதிமுக எம்எல்ஏ, டாக்டராக இருந்தும், அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தும் வாக்குறுதி அளித்திருந்தும், இதனை நிறைவேற்றவில்லை. இப்படி தொகுதிக்குள் வழங்கப்பட்டதில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றாமலேயே இருக்கின்றன. ‘தொகுதிக்கு என சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. தொழில் டாக்டர். ஆனால், தொகுதி என்னவோ நலம் குன்றித்தான் இருக்கு’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

‘‘உணவு பூங்காவுக்கு அடிக்கல்’’
வேடசந்தூர் எம்எல்ஏ டாக்டர் பரமசிவம் தரப்பினர் கூறும்போது, ‘தொகுதிக்குள் சாலை, குடிநீர், போர்வெல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எரியோடு பகுதியில் மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாயக்கூடம், நூலகம் உள்ளிட்டவை பல்வேறு துறை நிதிகளுடன் கட்டித் தரப்பட்டுள்ளன. தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு ஏற்ப அய்யலூரில் உணவு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தொகுதியில் முருங்கை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. எனவே, அதிக விளைச்சல் காலத்தில் விலை குறைவினாலும், பாதுகாக்க முடியாத நிலையையும் கருத்தில் கொண்டு விவசாயிகளின் நஷ்டத்தை போக்கும் விதமாக சேனங்கோட்டையில் முருங்கை பதப்படுத்தும் பவுடர் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

‘‘பூஜை போட்டதோடு சரி...’’
2016 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சிவசக்திவேல் கவுண்டர் கூறும்போது, ‘தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்களை விட,  அதிமுக எம்எல்ஏ தன்னை வளர்த்துக் கொள்ளும் வகையிலான திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான எந்த திட்டமும் இல்லை. ஒவ்வொரு திட்டத்திற்கும் பூமி பூஜை செய்யப்படுவதும், அதன்பிறகு அத்திட்டம் கண்டும் காணாமல் விடப்படுவதும் என தொகுதி முழுக்க பல திட்டங்கள், பூஜை போட்டதோடு  அப்படியே ‘‘அம்போ’’ என விடப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Doctor ,Doctor Paramasyvu , Doctor block unwell ...! Vedasandur constituency MLA Dr. Paramasivam
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...