×

நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: விவசாயிகளுக்காக வக்கீல் வில்சன் வாதம்

புதுடெல்லி: ‘நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு  கொண்டு வந்துள்ள நில ஊர்ஜிதம் - 2019 என்ற புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,’ என விவசாயிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
   அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் 2015ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், இதற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

 இதையடுத்து, மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015யை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எந்த இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்றும், அதேபோல் ஏற்கனவே மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர்ந்து நடக்க அனுமதி வழங்கப்படுகிறது என கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த தமிழக அரசு, நில ஊர்ஜித 2019 என்ற புதிய சட்டம் என குறிப்பிட்டு மீண்டும் மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துதலை மேற்கொள்ள முன்வந்தது. இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இந்த  வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரத்தில் ரிட் மனுதாரர்களை அவர்களின் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தவோ அல்லது அங்கு நுழைவதோ கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

 இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நில உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் குமணன் வாதத்தில்,” நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் ஏற்புடையது இல்லை. முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானவையாகும். அவர்களது வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்யும். இதில் முந்தைய சட்ட சரத்துகளில் சிறிய திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த மாநில நினைப்பது என்பது தவறனா செயலாகும். அதனால், இதுதொடர்பாக தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள நில ஊர்ஜித 2019 என்ற புதிய சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,’ என வாதிட்டனர்.
இதையடுத்து, வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் தமிழக அரசு தரப்பில் தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என தெரிவித்தனர். அதுவரை விவசாய நிலங்களில் அரசு தரப்பில் நுழையக் கூடாது என முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : TN Government ,Wilson , Tamil Nadu government should repeal new law on land acquisition: Wilson advocates for farmers
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’