×

நினைவு இல்லமாக மாற்றப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை பொதுமக்கள் பார்க்க தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

சென்னை:  போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை  விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவில்ல திறப்பு விழாவை நடத்திக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது எனவும்  இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். இதில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர்.  நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவு மட்டும்  அப்படியே தொடரும் என தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு  மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழ் அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து, இழப்பீடு தொகை வழங்கப்பட்டதை எதிர்த்து வெவ்வேறு வழக்குகள் வெவ்வேறு அமர்வுகளில் விசாரணையில் இருப்பதால், அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்புள்ள வழக்கில் உரிய தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தி, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில், தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் மீது இந்த அமர்வு  பிறப்பித்த உத்தரவுகள், தனி நீதிபதியிடம் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

Tags : Boise ,Jayalalida , Extension of ban on public viewing of Jayalalithaa's Boise home converted into memorial house: High Court session order
× RELATED வேதா இல்லத்தை விட பெரியது போயஸ்...