×

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம்: கோட்டை முற்றுகை, தடியடியால் பரபரப்பு: 200 பேரை போலீசார் கைது செய்தனர்

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாலும், கோட்டையை முற்றுகையிட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பயனளிப்பு ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மாநில தலைவர் அன்பரசு தலைமையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.   இதில் அரசு ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள் கோரிக்கையை முதல்வரிடமோ அல்லது துணை முதல்வரிடமோ நேரில் வழங்க வேண்டும் என்று அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரிடம் கூறினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டைக்கு செல்லாமல் தடுக்கும் வகையில் போலீசார் இரும்பு பேரிகாடு போட்டு இருந்தனர்.

ஒரு கட்டத்தில், அரசு ஊழியர்களில் சிலர் போலீசார் போட்டிருந்த தடுப்பை அகற்ற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும் அரசு ஊழியர்களில் சிலர் பேரிகாடை நகர்த்தி விட்டு கோட்டைக்கு செல்ல முயன்றனர். எனவே, போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில் சேப்பாக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், சிறிது நேரத்தில், சென்னை தலைமைச் செயலகம் முன்பு திரண்டனர். அங்கு கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தடுப்பையும் மீறி ஊழியர்கள் தலைமை செயலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

கோட்டை நுழைவாயிலில் பெண் காவலர்கள் இல்லாததால், பெண் அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதையடுத்து கூடுதல் ஆண் மற்றும் பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு கோட்டைக்குள் நுழைய முயன்ற மற்றும் சேப்பாக்கத்தில் வன்முறையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சேப்பாக்கம் பகுதியிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். போலீசார் தடியடியில் காயம் அடைந்த 3 அரசு ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தலை மற்றும் கையில் கட்டுடன் மீண்டும் போராட்டத்தில் வந்து கலந்து கொண்டனர். பின்னர் மாநில தலைவர் அன்பரசு தலைமையில் 10 நிர்வாகிகளை மட்டும் போலீசார் தலைமை செயலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதல்வர், துணை முதல்வர் பிரசாரத்துக்கு சென்றுவிட்டதாக கூறினர். இதனால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் நேற்று மாலை வரை சேப்பாக்கம் பகுதியில் திரண்டதால் தொடர்ந்து பதற்றம் நிலவியது.

Tags : Tsar , Wildcat strike demanding the government employees: Castle Siege, batons sensation: 200 people arrested
× RELATED நிதி ஒதுக்கப்பட்ட பின்பும் சாரல் விழா நடத்துவதில் இழுபறி