×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறினார் மெட்வதேவ்: சிட்சிபாஸ் வெளியேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் தகுதி பெற்றார். அரை இறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸுடன் (22 வயது, 5வது ரேங்க்) நேற்று மோதிய மெட்வதேவ் (25 வயது, 4வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் அதிரடியாக விளையாடிய அவர் 6-2 என வென்று முன்னிலையை அதிகரித்தார். மூன்றாவது செட்டில் சிட்சிபாஸ் சுதாரித்துக் கொண்டு கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் விறுவிறுப்பானது. நடாலுக்கு எதிரான கால் இறுதியில் சிட்சிபாஸ் 5 செட் கடுமையாகப் போராடி வென்றிருந்ததால், எதிர்பார்ப்பு அதிகரித்தது. எனினும், பதற்றமின்றி புள்ளிகளைக் குவித்த மெட்வதேவ் 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்து பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 9 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மெட்வதேவ் 2வது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னதாக, 2019 யுஎஸ் ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் நடாலிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

இறுதிப் போட்டியில் 8 முறை ஆஸி. ஓபன் சாம்பியனான நம்பர் 1 வீரர் நோவாக் சோகோவிச்சுடன் மெட்வதேவ் நாளை மோதுகிறார். கடைசியாக ஜோகோவிச்சுடன் மோதிய 4 போட்டிகளில் மெட்வதேவ் 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார்.
மேலும், அவர் தொடர்ச்சியாக 20 வெற்றிகளைக் குவித்து சூப்பர் பார்மில் இருப்பதால், ஜோகோவிச்சுக்கு கடும் சவாலாக விளங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவுடன் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி மோதுகிறார். மெர்டன்ஸ் - சபலென்கா சாம்பியன்: மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) - அரினா சபலென்கா (பெலாரஸ்) இணை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா - கேதரினா சினியகோவா ஜோடியை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


Tags : Medvedev ,Australian Open , Medvedev advances to Australian Open tennis final: Chitsibas out
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்