×

விவசாயிகள் போராட்டத்தால் அம்பானிக்கு புதிய தலைவலி: லட்சக்கணக்கான ஜியோ வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு தாவல்.!!

டெல்லி: விவசாயிகள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதோ அதே அளவிற்கு ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதி விவசாயிகள் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை நிறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் போராட்டத்தின்போது ஜியோ நிறுவனத்துக்கும் செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தினர். இதற்கு பஞ்சாப் முதல்வரும் விவசாயிகளிடம் செல்போன் கோபுரங்களை சேதப்படுத்த வேண்டாம் என்று விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் விவசாயிகளை தங்கள் பக்கம் இழுக்கும்  செயல்களில் ஈடுபடுவதாக டிராய் ஆணையத்தில் ஜியோ புகார் அளித்தது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தினால், ஜியோ நிறுவனம் சந்தித்த இழப்புகளை டெலிகாம் ஆபரேட்டர்களின் டிசம்பர் 2020 தரவு சுட்டிக்காட்டியுள்ளது. இதில், கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதம் வரை அரியானா மாநிலத்தில் ஜியோ நிறுவனம், 94.48 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 89.07 லட்சத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அதே வேலையில், நவம்பர் மாதம் வரை அரியானா  மாநிலத்தில் ஏர்டெல் நிறுவனம், 49.56 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 50.79 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இதனைபோல், கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதம் வரை அரியானா மாநிலத்தில் வோடபோன் ஐடியாவில் நிறுவனத்தில் 80.23 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால், டிசம்பர் மாதத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 80.42 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதனைபோல், கடந்த 2020 ஆண்டு நவம்பர் மாதம் வரை பஞ்சாப் மாநிலத்தில் ஜியோ நவம்பரில் 1.40 கோடி சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1.24 கோடியாகக் குறைந்துள்ளது. அதே

வேலையில், நவம்பர் மாதம் வரை பஞ்சாப் மாநிலத்தில் ஏர்டெல் நிறுவனம், 1.05 கோடி சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. ஆனால், டிசம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.06 கோடிக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் வரை பஞ்சாப் மாநிலத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம்  86.42 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. ஆனால் இது டிசம்பர் மாதத்தில் 87.11 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், விவசாயிகள் போராட்டத்தின் மூலம் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது.  பிஎஸ்என்எல் டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய 2 மாநிலங்களிலும் சந்தாதாரர்களை அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags : New headache for Ambani due to farmers' struggle: Millions of IO customers jump to another network !!
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...