×

மகாராஷ்டிரா, ராஜஸ்தானை தொடர்ந்து ம.பி: 3 மாநிலத்தில் சதம் அடித்த பெட்ரோல் விலை...19 நாளில் 13 முறை விலை உயர்வு.!!!

போபால்: மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை கடந்த நிலையில் கடந்த 19 நாளில் 13 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய  பிரதேசத்திலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.100.25க்கும், டீசல் ரூ.90.35க்கும் விற்பனையானது. வாட் (மதிப்புக் கூட்டப்பட்ட வரி), லாரி வாடகை போன்றவற்றின்  காரணமாக எரிபொருள் விலை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பெட்ரோலுக்கு அதிகபட்ச வாட் வரி விதிக்கப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் வரி விதிக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 33 சதவீத வாட் வரியுடன் 4.50 ரூபாயும், ஒரு சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசலுக்கு  23 சதவீத வரியுடன் ரூ.3, ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. இன்றைய நிலையில், தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 31 பைசாவும், டீசல் விலை 33 பைசாவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த மாதத்தில்  13வது முறையாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வரும்நிலையில், மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறுகையில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவதற்காக பிரதமர்  மோடியை பாராட்டுகிறேன். சூரிய மற்றும் மின்சார ஆற்றலைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்க மத்திய அரசு விரும்புகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், தற்போது விலை  அதிகரித்துள்ளது’ என்றார்.

Tags : Mahārṣṭra ,Rajasthana ,Ma. P , Following Maharashtra and Rajasthan, MP: Petrol price hits 100 in 3 states ... 13 times increase in 19 days !!!
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...