×

ஜெயலலிதா நினைவு இல்லம்...பொதுமக்களை அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதா வாழ்ந்த `வேதா இல்லம்’ அரசுடைமையாக்கப்பட்டு நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த 2017 ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், போயஸ்கார்டன் இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள ஜெயலலிதா இல்லத்தை திறந்து வைக்கலாம். ஆனால், ஜெலலிதா வீட்டை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது; அரசின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், ஜெயலலிதா நினைவகமாக மாற்றப்பட்ட போயஸ் கார்டன் இல்லத்தின் சாவியை அரசே வைத்துக்கொள்ளலாம் என்று கூறி வழக்கு விசாரணை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தில் பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்து ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதனையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கையும் ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது. மேலும் போயஸ் இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் வழக்குகளை சேர்த்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Jayalalitha ,Memorial Home ,Icourt , Jayalalithaa Memorial House ... Extension of ban on public access: order
× RELATED மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன்(98) காலமானார்