×

மதுரை கல்லூரிகளில் நடந்த ‘பறவை கணக்கெடுப்பு’வியக்க வைக்கும் விதவிதமான சிற்றினங்கள்

மதுரை : கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் பறவை கணக்கெடுப்பு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மதுரையின் பல்வேறு கல்லூரிகளில் கடந்த 4 நாட்களாக நடந்த இந்த பறவை கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  ‘ஜிபிபிசி 2020’ என்ற இந்நிகழ்வின்படி நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோதும், மதுரையில் வெகு உற்சாகமாக மாணவர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்த கணக்கெடுப்பில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 20 பறவை சிற்றினங்களை கண்டுபிடித்தனர். பழுப்பு ஈ பிடிப்பான், புள்ளி ஆந்தை, வல்லூறு, செம்மார்பு குக்குறுப்பான், இரட்டை வால் குருவி, ஏழு சகோதரிகள் (தவிட்டு குருவி), மரங்கொத்தி, பனை உழவாரன் போன்ற இனங்கள் கண்டறியப்பட்டது.

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் செம்புழை கொண்டைக் குருவி, வெள்ளை மார்பு மீன் கொத்தி, மடையான் கொக்கு, புள்ளி ஆந்தை, பச்சைக் கிளி, மணிப் புறா ஆகிய பறவைகள் உட்பட 15 சிற்றினங்கள் கண்டறியப்பட்டது.

மதுரை யாதவர் கல்லூரியில் 40க்கும் மேற்பட்ட விலங்கியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் துணையுடன் கணக்கிட்டனர். இதில், சுடலைக் குயில், பச்சை பஞ்சுருட்டான், உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, கொண்டலாத்தி, வண்ணாத்தி குருவி போன்ற 36 சிற்றினங்கள் கணக்கிடப்பட்டது. மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பறவை கணக்கிடல் பற்றிய ஒரு கருத்துப்பட்டறை நடத்தப்பட்டது.

மேலும் இங்கு நடந்த பறவை கணக்கெடுப்பில், 25க்கும் அதிக மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தேசிய பறவையான மயில் 25க்கும் அதிகளவில் காணப்பட்டது. மேலும் மாங்குயில், சுடலைக்குயில், கிளிகள், மணிப்புறா மற்றும் வால் காக்கை போன்ற 36க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் கணக்கெடுக்கப்பட்டன. சௌராஸ்டிரா கல்லூரியில் நடந்த கணக்கெடுப்பில் 25 மாணவர்களுடன் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு 33 பறவை சிற்றினங்கள் கணக்கெடுக்கப்பட்டன. முக்குளிப்பான், நீர் காக்கை, வெள்ளை நாமக் கோழி, மடையான், நாம்பல் நாரை, சாம்பல் கதிர்குருவி, பனை உழவாரன், தகைவிலான் குருவி, பச்சை பஞ்சுருட்டான், வெண்மார்பு மீன் கொத்தி போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் கூறும்போது, ‘‘இம்மாதிரியான நிகழ்வு மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி, பறவை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்’’ என்றார்.

Tags : Madurai Colleges , Madurai: An annual bird survey event is held at the college and school premises. Past at various colleges in Madurai
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...