×

கண்ணமங்கலத்தில் மாடுவிடும் விழாவுக்கு தடை காளை வேடமணிந்து கற்பனையில் விழா நடத்திய சிறுவர்கள்-ஆர்வத்துடன் ரசித்த கிராம மக்கள்

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் நேற்று காளை வேடமணிந்து சிறுவர்கள் எருது விடும் விழாவை நடத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் மாபெரும் போராட்டம் நடத்தி விழாவுக்கு அனுமதி பெற்றனர். இதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழாவும், வட மாவட்டங்களில் காளை விடும் திருவிழாவும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் காளை விடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் கூறி வருகிறது. இதனால் கிராம இளைஞர்களும், பொதுமக்களும் தமிழகம் முழுவதும் ஒரே சட்டம்தானே இருக்கிறது, மற்ற மாவட்டங்களில் காளை விடும் திருவிழா நடக்கும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அனுமதி மறுப்பது புரியாத புதிராக உள்ளது, இதனால் தமிழர்களின் வீர வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே போய் விடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் காளை விடும் திருவிழா நடப்பது வழக்கம். தற்போது விழாவுக்கு அனுமதியில்லாததால் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நேற்று வித்தியாசமான முறையில் காளை விடும் விழாவை நடத்தினர்.

அப்போது, காளை உருவம் பொறித்த முகக்கவசம் அணிந்து கொண்ட சிறுவர்கள், வாடி வாசலில் இருந்து காளை அவிழ்த்து ஓடவிடுவது போலவும், காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்து ஓடுவது போலவும், அவற்றை மாடு பிடி வீரர்கள் மடக்குவது போலவும் கற்பனையில் விழாவை நடத்தினர். இதனை வேடிக்கை பார்த்த கிராம மக்கள், காளை விடும் திருவிழாவின் மீது சிறுவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை எண்ணி மகிழ்ச்சியடைந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் திரளும் பாராம்பரியமிக்க காளை விடும் திருவிழாவை திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையின்றி நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Boys ,cow festival ,Kannamangalam ,festival , Kannamangalam: In the village of Reddipalayam next to Kannamangalam, a boy disguised as a bull held a bullfight yesterday.
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...