வேலூர் மாவட்டத்தில் நீர் இருந்தும் மின்சாரம் இன்றி 5ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகிய அவலம்-விவசாயிகள் கண்ணீர்

கண்ணமங்கலம் : வேலூர் மாவட்டத்தின் கடை கோடியாக உள்ள கீழ்பள்ளிப்பட்டு, வல்லம், மோட்டுப்பாளையம், மோத்தக்கல், கம்மசமுத்திரம், கம்மவான் பேட்டை , செலமநத்தம், வரகூர், கருங்காலிகுப்பம் ஆகிய கிராமங்களுக்கு கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த மாதங்களில் காலை 9மணி முதல் மாலை 3 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கினர். தற்போது சில நாட்களாக காலையில் மின் சப்ளை இல்லை. இரவில் 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மின்சாரம் வழங்கி வருகின்றனர். இதுவும் உறுதியான நேரமில்லை. மாசி மாதம் என்பதால் வறட்டு பனிப் பொழிவிலும் தங்களின் உடல் நலத்தை கருதாமல், கண் விழித்து நீர் பாய்ச்சும் துன்பத்திற்கு  விவசாயிகள்ஆளாகியுள்ளனர்.

2 முனை மின்சாரம் மட்டும் நாள் முழுவதும் அளிக்கப்படுவதாக காணப்பட்டாலும் அதுவும் பலமுறை காரணமின்றி நிறுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. மும்முனை மின்சாரம் இல்லாததால் கிணற்றில் தண்ணீர் இருந்தும் 5ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், நிலக்கடலை, வாழை, பப்பாளி, மஞ்சள், கரும்பு   உள்ளிட்ட பயிர்கள் நீரின்றி வாடுகின்றன.

மேலும் அதிக வெயில் காய்வதால் நெல் நடவு செய்துள்ள நிலம் பாளம்பாளமாக நீரின்றி வெடித்து காணப்படுகிறது. ஏரி பாசனம், ஆற்றுப் பாசனம் இல்லாத மேட்டுப் பகுதிகள் என்பதால் இக்கிராமங்களில் விவசாயம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து உள்ளது.

மும்முனை மின்சாரம் குறித்து கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் விவசாயிகள் பலமுறை முறையிட்டும் எந்தவித பயனில்லை. இதே நிலை தொடர்ந்தால் அடுத்ததாக மின்நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாக கூறினர்.

விவசாயிகளின் கோரிக்கை குறித்து கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்தில் விசாரித்த போது, ஆரணியில் ஒரு டிரான்ஸ்பார்மர்  பழுதடைந்துள்ளதால்  மும்முனை மின்சாரம் வழங்குவதில்  தடை ஏற்பட்டுள்ளது. அது சீரமைத்த  உடன் முன்பு போல் மும்முனை மின்சாரம் உரிய நேரப்படி மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

எனவே, வேலூர் மாவட்ட நிர்வாகம் செவி சாய்த்து, மும்முனை மின்சாரம் வழங்கி விவசாயிகள் வாழ்வில் ஒளி விளக்கேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க    வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>