×

மாசி மாத ரத சப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி-திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கலசபாக்கம் :  மாசி மாத ரத சப்தமியையொட்டி நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் மாசி மாதம் ரத சப்தமியை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை செய்யாற்றில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.

இதையொட்டி, திருவண்ணாமலையில் இருந்து நேற்று காலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டார். வரும் வழியில் கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சுவாமி பார்வையிட்டு வலம் வந்தார்.

தொடர்ந்து, கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது ஏராளமானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், செய்யாற்றை வந்தடைந்த கலசபாக்கம் திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரரும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும் நேருக்குநேர் சந்தித்து சங்கமித்தனர்.

இதையடுத்து, முக்கிய நிகழ்வான அண்ணாமலையார் தீர்த்தவாரி நடந்தது. இதற்காக செய்யாற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மெகா பந்தலில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், திரிபுரசுசந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் செய்யாற்றிலேயே அருள்பாலிக்கும் அண்ணாமலையார் இன்று காலை மீண்டும் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு செல்வார்.

Tags : Swami Darshan ,devotees ,Annamalaiyar Tirthavari ,Kalasapakkam ,occasion ,Rata Saptami ,Mata , Kalasapakkam: The Annamalaiyar Tirthawari was held at Kalasapakkam yesterday on the occasion of the chariot festival of the month of March. In which a large number of devotees Swami
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி