×

புதுச்சேரியில் இருந்து நேற்று வேலூர் வந்த லாரியுடன் ₹3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-கமிஷனர் ஆய்வில் சிக்கியதால் பரபரப்பு

வேலூர் :  வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல இடங்களில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர். நிரந்தரமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆற்காடு சாலை வழியாக தனது காரில் சத்துவாச்சாரி நோக்கி சென்றார். காகிதப்பட்டறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஒரு பார்சல் கடையில் லாரியில் இருந்து பொருட்கள் இறக்கி வைத்துக் கொண்டு இருந்தனர்.

சந்தேகம் அடைந்த கமிஷனர் சங்கரன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு, பொருட்கள் இறக்கிக் கொண்டு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, புதுச்சேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்கள் உள்ளிட்டவற்றை இறக்கி வைப்பது தெரியவந்தது.இதையடுத்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா, 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வருமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பார்சல் கடையிலும் சோதனை செய்தனர். அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி வாகனத்தில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து வந்த லாரி மற்றும் கடைக்கும் சீல் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம்.

பிளாஸ்டிக் பொருட்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை சேண்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி குடோனில் நிற்க வைத்துள்ளனர். கமிஷனர் ஆய்வில் லாரியுடன் பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கிய சம்பவம் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளின் அலட்சியம்

வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை ஆரம்பத்தில் பெருமளவில்  குறைந்தது. இதனால் கால்வாய்களிலும் பிளாஸ்டிக் அடைப்புகள் குறைந்து காணப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு ஏற்படுத்தியபிறகு மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அனைத்து கடைகளிலும் களைக்கட்டி உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் வேலூரில் மட்டும் ஆய்வு செய்து வருகின்றனர். மற்ற இடங்களில் கண்டுகொள்வது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் வேலூரில் மட்டுமே மாதத்திற்கு ஒரு இடத்தில் ஆய்வு செய்து சில கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துவிட்டோம் என்று கணக்கு காணப்பித்து வருகின்றனர்.

குறிப்பாக காட்பாடி பகுதியில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை குடோன்களில் பதுக்கி வைத்து சர்வசாதாரணமாக வியாபாரம் செய்து வருகின்றனர். இதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். அது தொடர்பான புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கான கடமையை சரிவர செய்யாதது வரை இதுபோன்ற தடைமீறல்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. கடமையை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags : Vellore ,Pondicherry , Vellore: Plastic products banned in the Vellore Corporation area are being sold ubiquitously in many places.
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...