×

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! : வைகோ பேச்சு

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை:

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டு கொல்
என்று கண்ணகி நீதி கேட்டபொழுது,
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்

என்று கூறி உயிர்துறந்து, நீதியை நிலைநாட்டிய நெடுஞ்செழிய பாண்டியன் ஆட்சிபுரிந்த மதுரை மாநகரில், ‘நீதி வேண்டும், நலிந்து அழிந்து கொண்டு இருக்கின்ற தமிழகத்திற்கு நீதி வேண்டும்’ என்று குரல் எழுப்புவதற்காக, இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டின் தலைவர், தமிழ் மாநிலக் குழுச் செயலாளர், என் ஆருயிர்த் தோழர் முத்தரசன் அவர்களே, அனைத்து இந்தியப் பொதுச் செயலாளர் ஆருயிர்த் தோழர் டி. இராஜா அவர்களே, தியாகத் தழும்பு ஏறிய மூத்த தலைவர், என்னுடைய பேரன்பிற்கு உரிய அண்ணன் நல்லகண்ணு அவர்களே, உடல் நலிந்தாலும், வீர முழக்கம் புரிந்து விடை பெற்றுச் சென்ற தோழர் தா.பாண்டியன் அவர்களே, தோழர் மகேந்திரன் அவர்களே,

மற்றொரு நிகழ்ச்சியின் காரணமாக, இங்கே முன்னதாகவே உரை ஆற்றி விடைபெற்றுச் சென்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாளை நடைபெறப் போகும் தேர்தலில் வெற்றி பெற்று, மணிமுடி தரிக்க இருக்கின்ற ஆருயிர்ச் சகோதரர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,இந்த மாநாட்டில் பங்கேற்று இருக்கின்ற, தோழமைக் கட்சிகளின் மதிப்புமிக்க தலைவர்களே,முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே,செங்கொடி ஏந்தி வெள்ளமெனத் திரண்டு இருக்கின்ற வீரர்களே,

தாய்மார்களே, பெரியோர்களே, ஏடுகளின் செய்தியாளர்களே, ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களே, வணக்கம்.பிப்ரவரி 18. இந்த நாள், வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நாள். இதே நாளில், 1860 ஆம் ஆண்டு, சற்றே வசதி வாய்ப்புகள் உள்ள ஒரு செம்படவக் குடும்பத்தில் பிறந்தவர்தான்  தென் இந்தியாவின் முதல் மார்க்சிய சிந்தனையாளர், முதல் பொது உடைமையாளர் சிங்காரவேலர். 1922 இல் கயா காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று உரை ஆற்றியபோது, காம்ரேட்ஸ்-தோழர்களே என விளித்து வியக்க வைத்தார்; அப்போதைய சென்னை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றபோது, மனசாட்சியின்படி பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்; ஆங்கிலப்புலமை மிகுந்தவர் என்றாலும், தன்னுடைய கன்னி உரையைத் தமிழில் நிகழ்த்திய சிங்காரவேலரின் பிறந்த நாளில், நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றதற்குப் பிறகு, அனைத்து இந்திய அளவில் முதல் மாநாடு,  1943 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்றது.பம்பாயில் கூடிய  இளைஞர்கள் மாநாட்டில் பேசிய பி.சி. ஜோஷியும், பி.டி. ரணதிவேயும்,  ‘இனி போலீஸ் நம்மைத் தாக்கினால், திருப்பித் தாக்குவது’ எனப் பேசினர். அதனால், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.1948-49-50 களில் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமான தோழர்கள், சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார்கள். நகக்கண்களில் ஊசி ஏற்றினார்கள்; துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

மதுரையில் தோழர் மணவாளன் தெருப்பாடல்கள் எழுதினார். மதுரையின் மா சே துங் என்று, தன்னைத்தானே அறிமுகம் செய்து கொள்வார். அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களுடைய தந்தையார் பழனியப்பன், ஒருநாள் மணவாளனைத் தெருவில் சந்தித்தபோது, என்ன மணவாளன், உன்னைச் சுட்டுக் கொல்வதற்கு, போலீஸ் தேடிக்கொண்டு இருக்கின்றது; ஆனால், நீ இப்படித் தெருவில் உலவிக்கொண்டு இருக்கின்றாயே என்று கேட்டபொழுது, எந்த நொடியிலும் சாவதற்கு நான் ஆயத்தமாகவே இருக்கின்றேன் என உறுதியோடு சொன்னவர்தான் மணவாளன்.

மதுரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான வைத்தியநாத ஐயர், மணவாளன் தாயார் தேவரம்மாளைச் சந்தித்து, மணவாளன் உயிரை முடிக்கக் காவல்துறை திட்டம் வகுத்து விட்டது; எனவே, குடும்ப சூழ்நிலை காரணமாக, நான் அரசியலில் இருந்து விலகிக் கொள்கின்றேன் என, மணவாளனிடம் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல் என்று சொன்னார்.அதேபோல, தேவரம்மாளும், மணவாளனிடம் கேட்டார். அப்பொழுது மணவாளன் சொன்னார்: அம்மா, நீங்கள் சொல்வதை மறுப்பதாகக் கருதி, நீங்கள் வருத்தப்படக் கூடாது; ஜூலியஸ் பூசிக் எழுதிய தூக்குமேடைக் குறிப்புகளை நான் படித்து இருக்கின்றேன்; அதைப்போல நான் சாக விரும்புகின்றேன் என்று, தம் கையாலேயே எழுதிக்கொடுத்து, இதைக் கொண்டு போய் அவர்களிடம் கொடுங்கள் என்று கொடுத்து அனுப்பினார்.

உடுப்பி ஓட்டலில் உணவு அருந்திவிட்டு, மாரி, மாரிமுத்து, சண்முகம் போன்ற தோழர்களைச் சந்திப்பதற்காக வந்துகொண்டு இருந்தபொழுது, துரோகி ஒருவன் காட்டிக் கொடுத்ததால், அனந்தராமன் என்ற காவல்துறை ஆய்வாளர், மணவாளனைப் பிடித்து, தம் கைத்துப்பாக்கியால், அவரது இடது மார்பில் சுட்டார். குண்டுகள் பாய்ந்தன; செங்குருதி கொப்பளித்த நிலையிலும், ‘கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்’ என முழங்கியவாறே மணவாளன் மண்ணில் சாய்ந்தார். அதன்பிறகு, மற்ற தோழர்களையும் காவல்துறை வேட்டையாடியது. மாரியையும் பிடித்துச் சுட்டுக் கொன்றார்கள். அவரும், கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத் என்றே முழங்கினார். அத்தகைய மணவாளனும், மாரியும் உலவிய மதுரை மண்ணில் நடைபெறுகின்ற மாநாட்டில் பேசுகின்றேன். அவர்கள் சிந்திய செங்குருதி, பொது உடைமைக் கொள்கைகளைப் பாதுகாக்கும்.

அத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்டவர்கள், பொது உடைமைத் தோழர்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய இரண்டாவது மாநாடு, 1948 ஆம் ஆண்டு, கல்கத்தாவில் நடைபெற்றது.  மூன்றாவது மாநாடு நடைபெற்ற இடம் இந்த மா மதுரைதான்.இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், இந்தியா முழுமையும் இருந்து 299 பிரதிநிதிகள் பங்கேற்றனர். 1953 டிசம்பர் 27 முதல்  1954 ஜனவரி 4 வரை ஒன்பது நாள்கள் நடைபெற்றது. எம்.ஆர்.வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். ஜோதிபாசு தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட மேலாண்மைக் குழு தேர்ந்து எடுக்கப்பட்டது. பி. இராமமூர்த்தி, அஜாய் கோஷ், சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி பங்கேற்றனர். தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இலட்சம் பேர் கலந்து கொண்டார்கள்.

அதேபோலத்தான், இன்றைக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது. இங்கே தீர்மானங்களை வாசித்தார்கள். அதில் ஒரேயொரு தீர்மானத்தில் மட்டும், 500 திருத்தங்கள் செய்ததாகச் சொன்னார்கள். அந்த அளவுக்கு, கொள்கைத் தெளிவு மிக்க தோழர்கள், பொது உடைமைக் கொள்கைகளில் ஊறித் திளைத்து இருக்கின்றார்கள்; கருத்து உரிமைக்கு மதிப்பு அளிக்கின்றார்கள் என்பதைத்தான் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.எத்தனையோ அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள் நீங்கள். சிறையில் இருந்தவாறே தோழர் பி. இராமமூர்த்தி, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.டி.கே. தங்கமணி, ஜானகி அம்மையார் போல, கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் பாடுபட்டவர்கள் ஏராளம்.

அன்றைக்கு இருந்தது போன்ற அடக்குமுறை, இன்றைக்கு மீண்டும் தலைதூக்கி விட்டது. எனக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் அதைப்பற்றிக் குறிப்பிட்டார்கள்.சிந்தனையாளர்களான, 80 வயது கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியர் ஆனந்த் டெல்டும்பிளே, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத மாற்றுத் திறனாளி பேராசிரியர் பேராசிரியர் சாய் பாபா, மனித உரிமை செயற்பாட்டாளர் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரைக் கைதுசெய்து, இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைத்துள்ளனர்.

கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுக்கொன்று விட்டார்கள்.
ஈவு இரக்கம் அற்ற, கொடூர சிந்தனை கொண்ட, மனசாட்சி அற்ற ஒரு அரசை நரேந்திர மோடி நடத்திக்கொண்டு இருக்கின்றார். குடி உரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய 52 பேர் பலியாகி இருக்கின்றார்கள். அதைப்போல, மூன்று வேளாண் பகைச்சட்டங்களை எதிர்த்து, இலட்சக்கணக்கான விவசாயிகள், உறைய வைக்கும் குளிரில் வீதிகளில் கிடந்து வாடிக்கொண்டு இருக்கின்றார்களே, அதைப் பற்றிக் கவலைப்பட்டாரா நரேந்திர மோடி? இல்லை. அவர் கார்பரேட் கம்பெனிகளுக்காக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றார். அதானிக்காக, அம்பானிக்காக ஆட்சி நடக்கின்றது.

வான் ஊர்தி நிலையங்களைத் தனியாரிடம் கொடுக்கின்றார்கள்; தொடரிகளைக் கொடுக்கின்றார்கள்; பொதுத்துறை நிறுவனங்களை அனைத்தையும்,தனியாரிடம் விற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து முடித்து விட்டார். அத்தகைய நரேந்திர மோடிக்கு நடைபாவடை விரிக்கின்ற, அடிவருடி அரசியலைத்தான், எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டு இருக்கின்றார்.காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்றார் எடப்பாடி. அதை ரசாயன மண்டலமாக அறிவித்து, அங்கே பல திட்டங்களுக்கு, நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகின்றார்.

நீட் தேர்வுக் கொடுமையால், 13 உயிர்கள் பலியாகின. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தில் 13 பேரைக் கொன்றார்கள். அவர்கள் சிந்திய செங்குருதிக்கு, எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லியாக வேண்டும். லஞ்சம் ஊழலில் ஊறித் திளைக்கின்றது அண்ணா தி.மு.க. அரசு. கொள்ளை அடிக்கின்ற, கொலைகார அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் நமது கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அத்தகைய வெற்றிக்காக நாம் அனைவரும் பாடுபடுவோம். காலத்தின் அருமை கருதி, இந்த அளவில் என் உரையை நிறைவு செய்து கொள்கின்றேன்.வெல்க செங்கொடி; வெல்க நமது கூட்டணி. நன்றி, வணக்கம்.

மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Tags : Modi ,Edappadi , வைகோ
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...