இடம் மாறி தவறுதலாக வந்ததால் பரபரப்பு: நடிகர் அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திடீர் வருகை: காவலர்கள் செல்பி எடுத்து ‘குஷி’

சென்னை: கால் டாக்சி டிரைவர் செய்த சிறு தவறால், பிரபல நடிகர் அஜித் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஓடிவந்து அஜித்தை சுற்றி நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ‘சென்னை ரைபிள் கிளப்’ உறுப்பினராக உள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் அஜித்குமார், கால் டாக்சி மூலம் சென்னை ரைபிள் கிளப்பிற்கு நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டுள்ளார். வழக்கமாக கால் டாக்சி டிரைவர் அஜித்திடம் எங்க செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே கால் டாக்சி டிரைவர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு கூகுள் மேப் மூலம் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

காரில் இருந்து இறங்கிய அஜித், நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரிடம் ‘ரைபிள் கிளப்’ செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அஜித் அப்போது குல்லா, முகக்கவசம், டீ-சர்ட் ஆகியவற்றை கருப்பு நிறத்திலேயே அணிந்திருந்தார். மேலும் காக்கி நிறம் கால் சட்டை அணிந்து இருந்தார். முதலில் அடையாளம் தெரியாத பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ‘ரைபிள் கிளப்’ எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். உடனே அஜித் தனது முகக்கவசத்தை கழற்றி நன்றி சார் என்று கூறி புறப்பட்டார். அஜித் முகக்கவசத்தை கழற்றியதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்தது நடிகர் அஜித் என்று தெரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஆண் மற்றும் பெண் போலீசார் அனைவரும் ஓடி வந்து எங்கள் ‘தல’ என்று கூறி அஜித்தை சூழ்ந்து கொண்டனர்.

பிறகு அனைவரும் குழுவாகவும், தனித்தனியாகவும் அஜித்துடன் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் தன்னை பார்க்க வந்த அனைத்து காவலர்களிடமும் நன்றி தெரிவித்துவிட்டு பழைய கமிஷனர் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: