ஆஸி ஓபன் பைனல் ஒசாகா, ஜெனிபர் முன்னேற்றம்: கண்ணீருடன் வெளியேறினார் செரீனா

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு   நவோமி ஒசாகா, ஜெனிபர் பிராடி ஆகியோர் முன்னேறினர். மெல்போர்னில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில்  ஜப்பானின்  நவோமி ஒசாகா(3வது ரேங்க்), அமெரிக்காவின் செரீனா வில்லிம்ஸ்(11வது ரேங்க்) மோதினர். இதுவரை 7முறை ஆஸி ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற  செரீனா 9வதுமுறையாகவும், ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒசாகா 2வது முறையாகவும் அரையிறுதியில் களம் கண்ட இருவரும் ஆஸி ஓபன் அரையிறுதியில் தோற்றதில்லை. ஆரம்பம் முதலே 23வயதான ஒசாகாவின்  வேகத்தை சமாளிக்க முடியாமல் 39வயதான செரீனா தொடர்ந்து தவறுகள் செய்தார். அதனை பயன்படுத்திக் கொண்ட ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செரீனாவை வீழ்த்தி 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தொடர்ந்து 2வது அரையிறுதியில்  செக் குடியரசின் கரோலினா முசோவா(25வது ரேங்க்),  அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி (22வது ரேங்க்) மோதினர். இருவரும் ஆஸி ஓபனில் முதல்முறையாக அரையிறுதியில் விளையாடினர். முதல் செட்டை  6-4 என்ற கணக்கில் ஜெனிபரும். தொடர்ந்து 2வது செட்டை 6-3 என்ற கணக்கில் கரோலினாவும்  கைப்பற்றினர்.  யாருக்கு வெற்றி என்ற 3வது செட்டை ஜெனிபர்  6-4 என்ற கணக்கில் தனதாக்கினார். அதனால் 2-1 என்ற செட் கணக்கில் வென்ற ஜெனிபர் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.  நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒசாகாவை எதிர்கொள்கிறார் ஜெனீபர்.

செரீனா ஓய்வா?

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்(78), 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை   வென்று முதலிடத்தில் இருக்கிறார். அதனை  சமன்  செய்ய திட்டமிட்டிருந்த செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அந்த இலக்கு, இந்த தோல்வியால் தள்ளிப் போயுள்ளது.  போட்டிக்கு பிறகு, அவர் சோகமான முகத்துடன் எல்லோரிடம் கையசைத்து விடைப்பெற்ற விதம் பல்வேறு கேள்விகளை எழுப்பின. அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘எனக்கு தெரியாது. நான் எப்போதாவது விடைபெற்றால்.  யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்றவர் கலங்கிய கண்களுடன் வெளியேறினார்.

Related Stories: