×

ஐபிஎல் ஏலத்தில் புதிய சாதனை: கிறிஸ் மோரிஸ் 16.25 கோடிக்கு ஏலம்: தமிழக வீரர் ஷாருக்கான் 5.25 கோடி

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்கப்பட்ட வீரர் என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா வீரர் கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது
ஐபிஎல் போட்டியின்  14வது தொடருக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று சென்னையில்  நடந்தது. ஏற்கனவே 8 அணிகளும் ஏலத்தில் பங்கேற்க வசதியாக கடந்த மாதம் 139 வீரர்களை தக்க வைத்தன. மேலும் 57 வீரர்களை விடுவித்தன.  எனவே ஏலத்தில் பங்கேற்க  பதிவு செய்திருந்த  1,114 வீரர்களில் இருந்து 292 பேரை ஏலம் கேட்க அனுமதிக்கப்பட்டது. வீரர்களின் அடிப்படை விலையாக குறைந்தபட்சம் 20 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.முதல் வீரராக  கருண்நாயர் ஏலம் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை 50லட்சம். ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை.ஆனால் அடுத்த சுற்றில் அடிப்படை விலைக்கு கொல்கத்தா வாங்கியது.

ராஜஸ்தான் அணி விடுவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க பெங்களூர், டெல்லி அணிகள் போட்டியிட்டன. அதில் டெல்லி அவரை 2.2கோடிக்கு(அடிப்படை விலை 2கோடி) ஏலம் எடுத்தது.
முதல் சுற்றில் ஏலம் போகாத  கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகியோரை 2வது சுற்றில்  அடிப்படை விலையான 2 கோடிக்கு  ஐதராபாத், கொல்கத்தா அணிகள் ஏலத்தில் எடுத்தன.

கிறிஸ் கொண்டாட்டம்
அதே நேரத்தில் தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிசை(அடிப்படை வி லை75லட்சம்) வாங்குவதில் கடும் போட்டி நிலவியது.  ஆனால் ஏலம் கோடிகளில் கேட்கப்பட்டது. மும்பை,  பெங்களூர் அணிகள் முதலில் போட்டியிட்டன. மும்பை 8.5கோடிக்கு கேட்டது. அடுத்து பஞ்சாப்பும் களத்தில் இறங்க ஏலத் தொகை அதிகரித்தது. முடிவில் ராஜஸ்தான் 16.25 கோடிக்கு  கிறிசை ஏலத்தில் எடுத்தது.  ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2015ம் ஆண்டு யுவராஜ் சிங்கை 16கோடிக்கு டெல்லி ஏலத்தில் எடுத்ததுதான் இதுவரை முதலிடத்தில் இருந்தது. சென்னை டெஸ்ட்டில் கலக்கிய இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை 7 கோடிக்கு (2கோடி)  சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.  மேலும்  வங்கதேச வீரர் ஷாகிப் அல் அசனை 3.2கோடிக்கு(2கோடி) கொல்கத்தா வாங்கியது. ஷிவம் துபேவை 4.4 கோடிக்கு  ராஜஸ்தான் ஏலம் எடுத்தது. பஞ்சாப் அணி விடுவித்த ஆஸ்திரேலியா வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை வாங்கவும் கடும் போட்டி இருந்தது.

அவரை 14.25கோடிக்கு(2கோடி)  பெங்களூர் வாங்கியது. அதேபோல் பஞ்சாப் விடுத்த மற்ெறாரு வீரர் கிருஷ்ணப்பா கவுதமை 9.25கோடிக்கு(20லட்சம்) சென்ைன வாங்கியது.  நியூசிலாந்து வீரர் கேல் ஜேமிஷனை 15கோடிக்கு(75லட்சம்) கடும் போட்டிக்கிடையில் பெங்களூர் ஏலம் எடுத்தது. பிக் பாஷ் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த ஆஸி வேகம் ஜே ரிச்சர்ட்சனை 14கோடிக்கு(1.5கோடி) பஞ்சாப் ஏலம் எடுத்துள்ளது. சர்வதேச டி20 போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் டேவிட் மாலன்(இங்கிலாந்து). அவரை அடிப்படை விலையான 1.5கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. ஆஸி வேகம் நாதன் கொல்டர் நெயிலை  மும்பை 5 கோடிக்கு(1.5கோடி) வாங்கியது.

புஜாராவுக்கு வாய்ப்பு
இந்திய டெஸ்ட் அணியின் பெருஞ்சுவரான புஜாராவுக்கு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக சிறப்பாக விளையாடியதுடன், குறைந்த பந்தில் சதம் விளாசினார். ஆனாலும் கடந்த ஆண்டு அவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை. இப்போது சென்னை அணி அவரை அடிப்படை விலையான  50லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

 ஷாருக்கானே நம்ம பக்கம்
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு அணிக்காக விளையாடிய 8 வீரர்கள் குறைந்தபட்ச அடிப்படை விலையான 20லட்ச ரூபாய் பட்டியலில் இருந்தனர். அவர்களில் ஷாருக்கான் முதலில் ஏலம் விடப்பட்டார். அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டியிட பஞ்சாப் அணி 5.25கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏலத்திற்கு பிறகு பஞ்சாப் சமூக ஊடகங்களில் ‘ஷாருக்கானே நம்ம பக்கம்’ என்ற அர்த்தத்தில் நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானின் படத்தை போட்டு ‘ஜாலி’யாக’ டிவிட் செய்துள்ளது.
* சையத் முஷ்டாக் அலி இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மணிமாறன் சித்தார்த் அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது. மற்றொரு தமிழக வீரர் செழியன் ஹரிநிஷாந்தை 20 லட்சத்துக்கு சென்னை வாங்கியுள்ளது.
* டிஎன்பிஎல், உள்நாட்டு தொடர்களில்  சிறப்பாக விளையாடியும் ஜி.பெரியசாமிக்கு முதல் சுற்று ஏலத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Tags : IPL ,Shah Rukh Khan ,auction ,Chris Morris ,Tamil Nadu , New record in IPL auction: Chris Morris bids for Rs 16.25 crore: Tamil Nadu player Shah Rukh Khan for Rs 5.25 crore
× RELATED சூப்பர் மேன் சுனில் நரைன்! ஷாருக் பாராட்டு