தமிழகத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது வல்லரசு நாடுகளில் கூட லேப்டாப் திட்டம் கிடையாது: வள்ளியூரில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வள்ளியூர்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் லேப்டாப் திட்டம் வல்லரசு நாடுகளில் கூட கிடையாது என வள்ளியூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கல்வி கற்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், புத்தகப்பை, லேப்டாப் ஆகியவை தந்து கல்வி கற்க வைத்துள்ளோம். தமிழகத்தில் 52 லட்சம்  மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லேப்டாப்பின் விலை ரூ.12 ஆயிரம். இதற்காக ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு  செய்து உலகத் தரமான கல்வி கிராமத்திலும் கிடைக்கச் செய்துள்ளோம். உலகில்  வல்லரசு நாடுகளில் கூட இந்த லேப்டாப் திட்டம் கிடையாது. தமிழகத்தில்  ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள்,  உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும்  தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து  வருகிறது.  இதன் மூலம் கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும்  கல்வித்துறைக்கு அதிக நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் உயர்கல்வி  படிப்பவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கு 49 பேர் என்ற நிலையை எட்டியுள்ள  முதல் மாநிலம் தமிழகம் ஆகும். இந்த அரசு முதல்வர் குறைதீர்க்கும்  கூட்டத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை நாடிச் செல்கிறது. திமுக  ஆட்சியில் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2011  தேர்தலின் போது ஜெயலலிதா விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்குவேன் என்றார்.  அதன்படி கொடுத்தாரா? இல்லையா? சட்டம் ஒழுங்கை பேணிக் காக்கும் மாநிலமாக  தமிழகம் திகழ்கிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக தமிழகம்  திகழ்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஜெருசலேம் புனிதப்பயணம் இனி 1000 பேருக்கு நிதியுதவி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடி நிதியுதவி ஒதுக்கப்பட்டது. 2018-19ல் 500 பேருக்கு வழங்கப்பட்டு வந்த இந்த நிதியுதவி 600 பேருக்கு என உயர்த்தப்பட்டது. இனி 1000 பேருக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும். அதுபோல் ரூ.20 ஆயிரம் நிதியுதவியும் ரூ.37 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்.

Related Stories:

>