×

திருவண்ணாமலையில் ‘இலை’க்கு இடமில்லை: கூட்டணிக்கு ‘தள்ளிவிட’ திட்டம்

திருவண்ணாமலை தொகுதியில் கடந்த 1957ம் ஆண்டு முதல் கடந்த 2016 வரை நடந்த 14 சட்டமன்றதேர்தல்களில், 9 முறை திமுகவும், 5 முறை காங்கிரசும் வெற்றிவாகை சூடியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை இந்த தொகுதியில் வெற்றிக்கனியை திமுக சுவைத்திருக்கிறது. கடந்த 1972ல் அதிமுக உருவானபிறகு, 1977 முதல் 2016 வரை 11 சட்டமன்றத் தேர்தல்களை அக்கட்சி சந்தித்திருக்கிறது. ஆனாலும், திருவண்ணாமலை தொகுதியில் இதுவரை ஒருமுறைகூட இரட்டை இலை வென்றதில்லை. அதனால் இந்த தொகுதியில் இரட்டை இலையில் போட்டியிடுவது சாதகம் இல்லை என உணர்ந்த அதிமுகவினர் இந்த தொகுதியில் போட்டியிடுவதை விரும்புவதில்லை. மேலும்,இந்த தொகுதியில் நேரடியாக களம் இறங்குவதை தவிர்த்து, 1991 மற்றும் 1996ல் காங்கிரசுக்கும், 2001ல் பாமகவுக்கும் இந்த தொகுதியை ஒதுக்கிவிட்டு அதிமுக ஒதுங்கிக்கொண்டது.

அதன்பிறகு, கூட்டணிகளும் இந்த தொகுதியை விரும்பாததால், அதிமுக சார்பில் 2006ல் போட்டியிட்ட முன்னாள் நகராட்சித் தலைவர் பவன்குமார், 2011ல் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், 2016ல் போட்டியிட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் ராஜன் ஆகியோர் தோல்வியையே தழுவினர். அதோடு, 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி என்பது அதிர்ச்சியை அதிகரித்தது. மேலும், இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவினரின் அரசியல் வாழ்வும் சரிவை சந்தித்தது. அதனால், இந்த தொகுதியில் போட்டியிடுவது ‘ராசியில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் அதிமுகவினர். எனவே, இந்த முறை எப்படியாவது கூட்டணி கட்சிகளுக்கு திருவண்ணாமலையை ‘தள்ளிவிடலாம்’’ என திட்டமிட்டுள்ளதாக தொகுதியில் பரவலாக பேசப்படுகிறது.


Tags : alliance ,Thiruvannamalai , No place for ‘leaf’ in Thiruvannamalai: ‘postpone’ plan for alliance
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி