×

தலைமையிடம் விசுவாசம்... மக்களின் நிலை படுமோசம்... போடி தொகுதி எம்எல்ஏ துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் விஐபி தொகுதி என்ற பெயர் பெற்ற தொகுதிகளுள் போடியும் ஒன்று. ஜெயலலிதா முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி என்ற பெருமையும் கொண்டது. தொகுதிக்குள் கொட்டக்குடி, முல்லை பெரியாறு ன்றவை இப்பகுதி பாசனம், குடிநீருக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. நெல் விளைச்சலுடன், தொகுதியின் கேரள எல்லையில் ஏலம், காபி, மிளகு, தேயிலை என பணப்பயிர்களும், பூக்கள், மலைக்கிராமங்களில் இலவம், ஆரஞ்சு, சப்போட்டா,  மா, தென்னை உள்ளிட்ட பலதரப்பட்ட விவசாயமும்  கொண்ட பசுமை பூமியாகவும் விளங்குகிறது.

போடி தொகுதியில் 2011 மற்றும் 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வென்று, 10 ஆண்டுகளாக தொடர்ந்து தொகுதிக்கான எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த தேர்தலின்போது குரங்கணி டாப் ஸ்டேஷன் மலைச்சாலை, நகராட்சி குடிநீர் அபிவிருத்தி, மல்லிப்பட்டி மலைச்சாலை போன்றவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். எதையுமே நிறைவேற்றவில்லை. மாம்பழச்சாறு தொழிற்சாலை, சீலையம்பட்டியில் பூக்கள் உற்பத்தி அதிகளவு  உள்ளதால் தனி சந்தை, வாசனை திரவிய (சென்ட்) தொழிற்சாலை, பூக்களை பாதுகாக்க குளிரூட்டும் மையம் அமைப்பேன் என ‘‘மணக்கும்’’ வாக்குறுதி தந்தார். ஆனால், செயல்பாட்டில் மணக்கவில்லை. தேவாரம் அருகே 60 கிமீ சுற்றாமல் கேரளா செல்ல சாக்கலூத்து மெட்டு பாதை என இவர் அடுக்கிக் கொட்டிய வாக்குறுதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பாதை திட்டமும் ‘‘பணால்’’.

தேர்தல் நெருங்குவதால் குரங்கணி டாப் ஸ்டேஷனில் 11 கிமீ தூரம் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால் வேலை நடக்கவில்லை. போடி வடக்குமலை மல்லிப்பட்டி 5 கிமீ மலைச்சாலை, குரங்கணி பிச்சாங்கரை இடையே இரு மலைகள் சந்திக்கும் அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான அணை கட்டி மழை நீரை தேக்கி 48 கிராமங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும் விதமான திட்டம், மதிப்பீட்டோடு முயற்சிக்காமல் அப்படியே ‘‘அம்போவாக’’  விடப்பட்டிருக்கிறது. ‘‘எம்எல்ஏவாக இருந்த காலங்களில் பெரும்பாலும் கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருந்தாரே தவிர, வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இல்லை. மேலும், தனது தோட்டத்திற்காக ராட்சத கிணறு அமைத்த விவகாரத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இல்லை. தனது நிலையை தக்க வைக்க போராட்டம் நடத்தியவர், எங்களின் வாழ்க்கை ஒளிர ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை...’’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

* ‘‘எல்லாவற்றையும் நிறைவேத்திட்டேன்’’
போடி  தொகுதி எம்எல்ஏவும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘தேர்தலின்போது போடி தொகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள்  எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டேன். 18ம் கால்வாய் திட்டம் நீட்டிப்பு,  தொகுதிக்குள் பொறியியல் கல்லூரி, குடிநீருக்கு சாம்பலாறு, முல்லை பெரியாறு  திட்டம், கண்மாய்கள் சீரமைப்பு, சின்னமனூர் பஸ் ஸ்டாண்ட் இப்படி சொல்லிக்  கொண்டே போகலாம். மேற்கு மலை பகுதியிலுள்ள குரங்கணி டாப் ஸ்டேஷன் மலைச்சாலை அமைக்காமல் விடுபட்டுள்ளது. இந்த பணியும் நிறைவேற்றப்படும். மிக விரைவில்  சாலை அமைக்க அரசாணை வந்து விடும். அதனையும் நிறைவேற்றுவோம்’’ என்றார்.
‘‘தொகுதிக்குள் அவரை பார்க்கவே முடியாது’’

திமுக வேட்பாளர் லட்சுமணன் கூறும்போது, ‘‘தொகுதியில் 10 ஆண்டுகாக எம்எல்ஏவாக தொடர்ந்தும், ஓபிஎஸ் இதுவரையில் பெரிதாக ஏதும் செய்யவில்லை. காபி போன்ற விளைபொருட்களை அடிவாரம் வரை தலை சுமையாகவே தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கிறது. குரங்கணி டாப் ஸ்டேஷன் மலைச்சாலை ஏற்கனவே வனத்துறையினர் எதிர்ப்பால் கிடப்பில் கிடக்கிறது. திடீரென குரங்கணியிலிருந்து ஜீப் மூலமாக முதுவாக்குடி சென்று சாலை போட அடிக்கல் நட்டியுள்ளார். முறையான அனுமதி பெறப்பட்டதா? தேர்தலுக்காக தொகுதி மக்களின் காதில் பூ சுற்றியுள்ளார். சாதாரணமாக பொதுமக்கள் தொகுதிக்குள் ஓபிஎஸ்சை பார்த்து விட முடியாது. அப்படியே தப்பித் தவறி பார்த்து மனு கொடுத்தாலும், அது ஆற்றுப் புதருக்குத்தான் குப்பையாகப் போய்ச்சேரும். துணை முதல்வராக இருந்தும், தொகுதிக்கும், மக்களுக்கும் பயன் தரவில்லை’’ என்றார்.

* இதுக்கு எல்லாம் கை தட்ட மாட்டீங்களா? ஓபிஎஸ் விரக்தி
தேனியில் சமீபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணைமுதல்வர் ஓபிஎஸ் கலந்துகொண்டு வீட்டுமனை பட்டா, தாலிக்கு தங்கம் உள்ளிட்டவை வழங்கி பேசினார். கூட்டத்தை ‘கூட்டியபோதும்’ அவர் பேச்சை கேட்பதில் யாருக்குமே ஆர்வமில்லை. ஆனால், அவரோ அரசின் சாதனைகள் என பட்டியல் போட்டு கூறிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சுதாரித்தவர், கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் பெற வந்தவர்களைப் பார்த்து, ‘‘இதுக்கு எல்லாம் கை தட்ட மாட்டீங்களா?’’ என்று கேட்டார். உடனே நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக காத்திருந்த பெண்கள், வேறு வழியின்றி கைதட்டினர். ‘‘நாம சும்மாயிருந்தா நம்மளையும் திட்டுவாரோ’’ என எண்ணிய அதிமுக தொண்டர்களும் கைத்தட்ட துவங்கினர். அதன்பின்னரே ஓபிஎஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சென்றார்.


Tags : O. Panneerselvam ,constituency ,Bodi ,MLA , Loyalty to the leadership ... People's condition is bad ... Bodi constituency MLA Deputy Chief Minister O. Panneerselvam
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...