×

ஊரக பகுதி முன்னுரிமை திட்ட நிதியில் அமைச்சர் தொகுதியில் நடைபெறும் 237 பணிகளுக்கு தடைகோரி வழக்கு: விரிவான பதில்தர அரசுக்கு ஐகோர்ட் அவகாசம்

சென்னை: ஊரக பகுதி முன்னுரிமை திட்ட நிதியத்தின் கீழ், அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் 237 பணிகளுக்கு தடை கோரிய வழக்கில் அரசு விரிவான பதில்தர கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை,  கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக ஆயிரத்து 53 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, 2020-21ம் ஆண்டுக்கான கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், மூன்றில் இரண்டு பகுதியான 702 கோடி ரூபாய், ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும் 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டி, நாமக்கல் மாவட்டம், அனிமூர் பஞ்சாயத்து தலைவர் தாமரைச் செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில், அமைச்சர் தங்கமணியின் தொகுதி உள்பட மூன்று தொகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற தொகுதிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் தொகுதியை வளப்படுத்தும் நோக்கத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறை கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளையும் சமமாக பாவிக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் இப்பணிகளுக்கான டெண்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வக்கீல் ஜெ.ரவீந்திரன் வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறு தொகுதிகளும் சமமாக பாவிக்கப்பட்டுள்ளது. தற்போது, குமாரபாளையம் தொகுதியில் 237 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, 25 சதவீத பணிகள் துவங்கியுள்ளது. கடந்த 2016-17 முதல் 2019-20 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஆறு தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட சம அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்று, வழக்கை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், குமாரபாளையம் தொகுதியில் 237 திட்டப்பணிகள் துவங்கி விட்டதால், அவற்றை தடுத்து நிறுத்த முடியாது. இப்பணிகளுக்கான டெண்டர் கோரியது, பணிகள் வழங்கியது உள்ளிட்ட விவரங்களை தேதி வாரியாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு வழங்க அரசுத்தரப்புக்கு  உத்தரவிட்டனர்.

Tags : constituency ,response government ,Rural Priority Project Fund: I-Court , Case seeking ban on 237 ministerial posts in rural priority project funds
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...